Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல்.பாடல் எண்.7க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
கூறுகின்ற சமயமெல்லாம் மதங்க ளெல்லாம் பிடித்துக்
  கூவுகின்ற பலன் ஒன்றும் கொண்டறியா வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
  நீடுலகில் அழிந்திடவே நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
  இறங்குதிறக்கதவு திறந்(து) இன்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தியுறப் புரிவாய்
  சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.                (திரு அருட்பா)

விளக்கம்.

     இதிலே, சமய மதங்களிலே விவாதிக்கப்படுகின்ற விதிமுறைகளின், கொள்கை கோட்பாடுகளின் நற்பலனற்ற விளைவு பேசப்படுகிறது.  இவர்கள் (தம் தம்) மதம் பிடித்து கூவுகின்றார்களாம். இறை அனுபவ வாழ்வாம் பலனைப் பெறாது வீண்போய் விடுகின்றார்களாம்.

          பழைமையாகத் தோன்றி அழியாது விளங்கிக் கொண்டுள்ள சமயங்களும், மதங்களும் தெய்வீகமானவை எனவும், அவற்றின் மூலமாகத்தான் மக்கள் இனம் உயர்வு பெற முடியும் எனவும் கருதப்பட்டன.  இன்னமும் கருதப் படுகின்றன.  மதம் இல்லையேல் மக்கள் மாக்கள் ஆகிவிடுவார்கள் என்றும் கருதப்பட்டது. இவற்றின் உண்மையும் விளைவுகளும் இத்தருணம் அருட்பெருஞ்ஜோதி வழியில் நன்கு அறிந்து கொள்ளப்படுகின்றன.

                      முன்னெறிகள் எல்லாம் மனிதன், அழிந்துபடும் உடல் வடிவினன் எனவும், கடவுள் மட்டும் அனாதி நித்திய ஆனந்த வடிவினர் எனவும் ஏகதேச அருளால் கண்டு, அக்கடவுளை அடைந்து இன்புற்றிருக்கவே வழிகாண முயன்றனர் ஆன்றோர் பலரும். நம் வேதாகம முடிவுகளும், பாச பந்த உலக வாழ்வை உதறிவிட்டுப் பதிக்கலப்பில் ஐக்கியமாகிப்போவது அல்லது பிரம்மானந்தத்தில் மறைந்து விடுவதுதான் முடிவாகக் கொண்டிருந்தனர். மண்ணுலக தற்காலிக வாழ்வை நீக்கிவிட்டு, விண்ணுலகை அடைந்து விடுவதே பெரும் பேறாக எண்ணினர் முன்னோர் பலர். இப்படிப்பட்டவர்கள் மூலம் பகுத்தறிந்து. வகுத்து, தொகுத்து வழங்கப்பட்டனவே தெய்வ நெறி முறை பலவும்.

                    நித்திய சத்திய மெய்ப்பொருள் இந்த மாபிரபஞ்சத்திற்கு ஒருவரே என்பதும் அவரே உள் ஏகமாய் இருந்து கொண்டே புறத்து எல்லாமாய், அனேகமாய்த்தோற்றுவதும் மறைவதுமாய் உள்ளார் என்றும் இத்தருணம் அப்பதி தயவால் உணர்த்தப் பெறுகின்றோம். அதனால், அவர்தானே உண்மையில் முன்னும், இன்றும், பின்னும் ஒவ்வொருவருமாய் விளங்குவது மற்றும் மெய்யே எனவும் அறிகின்றோம். இதனால், மனிதன் கடவுளுக்கு அன்னியன் அல்ல. இவன் தேகம் ‘தான் என்ற பற்றல் கடவுளுக்கு அயலாக தன்னைக் கருதுவது தவறே எனவும் அறியப்படுகின்றது. அப்படித் தவறான எண்ணத்தால்தான், தான் அநித்தியன் எனவும் கடவுள் ஒருவரே நித்தியர் எனவும், கொள்ளப்பட்டது எனவும் தெளிவுறுகின்றான். இத் தெளிவு கொண்டு உணரும்போது, சுத்த சத்விசாரத்தால் தேகப்பற்று, நிலை கடந்து உள் விளங்கும் நித்திய கடவுள் நிலை சார்ந்து நின்று, தயவால், வாழ்வதால், அந்த அகநித்திய இறைமய இயல்பு உணர்வில் நிரம்பி, உயிரிற் சார்ந்து, உடலிற் கலந்து, இறை அனுபவத்தோடு என்றும் வாழ்ந்து கொண்டிருக்க உதவுகின்றது, வள்ளல் கண்ட உண்மை அனுபவமாகும், இப்படிக் கடவுள் நிலை கண்டு கலந்து வாழும் முறையே எவர்க்கும் நித்தியானந்த வாழ்வில் அகமிருந்து அனகப்படுத்துவதாய் இருக்கின்றதாம். இந்த வாழ்வு பெறு முறையே சுத்த சன்மார்க்கம், அனக நெறி வாழ்வு என்று வழங்கப் பெற்றுள்ளோம். இதன்மூலம் உலக மக்கள் சமுதாயம் உயர்வு பெறுவது நிச்சயம். இதனால், பழைய நெறிகளைக் கொண்டு பயன் ஒன்றும் அடைய முடியாது என்பது திண்ணம். அதற்கு இன்றைய உலக நிலையே கண்கூடு. இதனால்தான் இங்கு இச்செய்யுள் முதலடியில், சமய மத கொள்கைகளையும், அவற்றைக் கொண்டு வழக்கும், வாதமும், சண்டையும், சச்சரவும் செய்து வீண்போவடை எல்லாம் சாடுகின்றார் நம் பெருமான்.

                      அருள் அமுத நெறி சார்ந்து அழியா இன்ப வாழ்வடையாதார் எல்லாம் அறிந்து மண்ணாகி, நாறிக் கெட்டுக் போகின்றார்களாம்.  அவர்களைப் போல் இவர் அழிந்து ஒழிய நினைக்கவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். இவர் இதுவரை யாரும் ஏறா நிலைமிசை ஏற விழைந்தார். அப்படி ஏறற்கான பேராற்றலைத் தந்து அப்பெருநிலை மேலே, ஏற்றிவிட்டுள்ளார் அருட்பெருஞ்ஜோதி நடனபதி.  இந்த அருட்பெரும் மேநிலை இருக்கிறதே இதனைப் புறத்திருந்து, எவராலும், எக்காலத்தும், எவ்விதத்தும் அடைந்து விட முடியாது. ஏனெனில், அம் மேனிலை ஆண்டவர் விளங்கும், தீண்டப்படாத உயர் நிலையாகும். அருள் மயமானோர்தான் தம்மையும் அவ்வாண்டவரோடு பிரிவற இருப்பதையுணர்ந்து கொள்ள முடியும். அவர்களே அம் மேனிலைமேல் ஏறாது ஏறி இருப்பவர்கள் ஆவர்.  மற்றபடி அந்நிலை அடைதல் முடியாதாம். முன்னெறியாளர் பலரும் அருள் நிலையுற்று ஆண்டவர் மயமாகி விளங்காத காரணத்தால், அந்நிலையுறாதவர்களே ஆவர். அவர்கள், வாழ்வற்று, வீண்போய்விட்டார்கள். 

                 நம் அருட்பிரகாசர், விசார முறையால், திருமுன் உற்று வேண்டிக் கொண்டதால், திருக்கதவம் திறக்கப் பெற்றார். அருட்ஜோதி இன்னமுதமும் வழங்கப் பெற்றார். “அருட்பெருஞ்ஜோதியைக் கண்டேனே...ஆனந்தத் தெள்ளமுதுண்டேனே”, என்று கூறி பரவசம் பெறுகின்றார். மற்ற மற்ற யோக ஞான மார்க்கங்களில் சென்று அடைந்த அமுத சக்தியால் பிறர் பெற்ற சித்திகளைத்தான் உலகம் புகழ்ந்து கொண்டுள்ளது இதுவரை.  இவர் ஏற்ற அமுதம், சாதாரண அற்புத சித்திகள் செய்யமட்டும் உதவுவதல்லவாம். அச்சித்திகளை இச்சிக்கவும் இல்லை இவர். இவர் வேண்டுவதே மெய்ஞ்ஞான சித்தியாகும்.

              மெய்ஞ்ஞான சித்தி என்றால் என்ன? சத்திய ஞானத்தால் கடவுள் உண்மையை உள்ளபடி அறிந்து கொண்டு, அவர் மயமாய் அழியா இன்போடு என்றும் வாழ்ந்து கொண்டிருப்பதேயாகும்.  இதுதான் மெய்ஞ்ஞான சித்தி என்கின்றனர்.  இந்த சித்திப் பேற்றினையே. இப்பாடல் மூலம், சித்த சிகா மணியாம் அருட்பெருஞ்ஜோதி நடன நாயகரிடம் வேண்டிப் பெற்றுக் கொள்ளுகின்றார்.

               நாமும், பழநெறிப் பற்றினை எல்லாம் விட்டு, சுத்த தயவு நெறி கொண்டு, அருட்பெருஞ்ஜோதியை அடைய வேண்டுவதே அவரது திருவுள்ளமும் ஆணையுமாம்.

              சத்திய ஞான சபைத் திருக்கதவம் திறக்கப் பெற்று, திரைகளை எல்லாம் விலக்கப் பெற்று, அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு, கலந்து அதுவாகி நிற்க வேண்டியது முதல் கூறு. பின்னர், அவ்வக நிலை நின்று, தேக போக பற்றற்று, திருவருளால் வழங்கப் பெறும் இடம் பொருள் ஏவல்களைத் தயவோடு இயன்றபடி, இயன்ற சூழ்நர்க்கு வ்ழங்கி வரல் வேண்டும். அப்படி செய்து கொண்டிருந்தால், அந்த அக ஜோதியே, தயவு வண்ணமாகி விரிந்து நம்மில் நிறைந்து, திரிதேக சித்தியோடு வாழச் செய்வது சத்தியம். வழங்குவோம் தயவு.
   
IMG_20171002_123248.jpg

IMG_20171002_123248.jpg

Thangaraj Aru
நல்ல விளக்கம், நம்முடைய உண்மையான நிலையை உணர்ந்து ஆன்ம மயத்தை அறியும் தன்மையைப் பற்றி தெளிவாக அறிவுறித்தியது மிக நன்று
Thursday, May 24, 2018 at 16:00 pm by Thangaraj Aru