Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.23க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
மணம்கே தகைவான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல்விரைவேன்
பிணங் கேம் சிறிதும் நில்லுமென்றேன் பிணங்கா விடினும் நென்னலென
அணங்கே நினக்குஒன் றினிற்பாதி அதிலோர் பாதி யாகுமிதற்கு
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இதுதான் சேடி என்னேடி.                   (திரு அருட்பா)

விளக்கம்...

     ஒற்றிவானில் கேதகை (தாழை மலர்) மணம் நிரப்பியுள்ளதாம். இங்குள்ள இறைவர் ஏன், என்ன கோபம்..விரைந்து போகிறாரே என்று தலைவி நினைக்கின்றாள்.   “நான் கொஞ்சமும் உங்களிடத்தில் பிணக்கம் கொள்ளவில்லையே,  நில்லுங்கள்” என அழைக்கின்றாள்.

           திருவொற்றியூர் கடற்கரையைச் சார்ந்துள்ளது. இதனை நெய்தல் நிலமாகக் கொள்ளுவர். இங்கு தாழைப்புதர் மண்டி இருக்குமாம். அத்தாழையின் மணம் வீசிக் கொண்டிருப்பது இயல்பே.  இதற்கு அடுத்தது மருத நிலம் என்பது நாம் அறிவோம். அகப்பொருள் இலக்கண மரபுப்படி இம்மருத நிலத்தும், நெய்தலிலும் ஊடல் இரங்கல் நிகழும் என்ப.  மருத எல்லையை விட்டு,  நெய்தல் ஒற்றுக்கு விரைந்து செல்வதாக எண்ணின தலைவி “தான், தலைவரிடம் ஊடல், பிணக்கம் கொள்ளவில்லை, சிறிதும் பிணங்கவில்லை,” எனக்கூறி அழைக்கின்றாளாம். நென்னல் அதாவது முன்னாள் இரவு அறியாமையினுள் பிணங்கி நின்றதுண்டு. ஆனால் இப்போது பகலேறி வெப்பமிகுகின்றது, ஒற்றிக் கரை மணல் சூடேறி விடும் தலைவியும் தொடர்வாளேயானால், அவள் கால் வருந்தும், பிணக்கம் கொள்ளும் என்ற காரணத்தால்தான், தன் பதிக்கு விரைகின்றார் ஆம்..! “நீ பிணங்காவிடினும், உனது, பாதியிற் பாதியான கால் பிணங்கும், அதற்கு நான் இணங்க மாட்டேன், சிறிதும் சம்மதியேன்” என்று இரக்கத்தோடு இசைக்கின்றார்.

              அறியாமை இருள் சூழ்ந்த முன் நாளில், திருவருளுக்கு மாறுபட்டு பிணங்கிக் கொண்டிருந்த ஆன்மா இப்போது, அறிவு ஒளி பெற்று வேண்டுகிறது. ஆண்டவர் மிக இரக்கத்தோடு அவ்வான்மாவுக்கு சிறிதும் துன்பம் உண்டாகக் கூடாது என்று அருள் பாலிக்கவே வருகின்றார் என்பது உண்மையாம். 

            உத்தரஞான சிதம்பரமாம் வடலூர் வள்ளல் ஆன்மாவுக்கு, அப்பதியிலேயே எல்லாப் பக்குவமும் அனுபவமும் ஏற்பட்டு பேரின்ப வாழ்வும் சேர்ந்து விட்டதை அறிகின்றோம்.  அவர் நிறையருளாலே ஏறா நிலை மிசை ஏறியிருந்து கொண்டு, கூடாதே கூடி விளங்கி நின்று இன்ப வாழ்வில் திளைக்கின்றார். இக்கருத்தை விளக்கும் அருட்பா ஒன்று இதோ: 

“இணையென்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல
துணையென்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்ததென்னை
அணையென்(று) அணைத்துக் கொண் டைந்தொழிலும் ஈந்த தருளுலகில்
திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே”.

                   இதன்படி தயாவொழுக்கத்தோடு கூடிய சுத்த சத்விசாரத்தால் மேனிலை பதியொடு மேவாமல் மேவி இருந்து கொண்டு, ஊடலும், இரங்கலும், பிரிதலும், இருத்தலும், பெறாது, என்றும் இனிது மகிழ்ந்து அம்பலத்தரசோடு ஆனந்தமாக வாழலாம் என்பது வள்ளல் அனுபவம்.



1432804918974.jpg

1432804918974.jpg