Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.22க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
உடற்(கு) அச்சுயிராம் ஒற்றியுளீர் உமது திருப்பேர் யாதென்றேன்
குடக்குச் சிவந்த பொழுதினைமுன் கொண்ட வண்ணர் ஆம்என்றார்
விடைக்குக் கருத்தா ஆம்நீர்தாம் விளம்பன் மிகக்கற் றவர்என்றேன்
இடக்குப் புகன்றாய் என்கின்றார் இதுதான் சேடி என்னேடி...                   (திரு அருட்பா)

000000000000000000000000000000000000000000000000000000000000000000

   
 உடலுக்கு அச்சு எதுவெனில் ஆன்மாவாகிய கருவே. அந்த ஆன்ம காரணமாய் இயங்கிக் கொண்டிருப்பது மூச்சுக் காற்றாகிய ஜீவன், இதனையே உயிர் என்று சொல்லுகின்றார்கள். ஆனால் இவ்வுயிருக்கு உயிராய் இருக்கின்றது அந்த ஆன்ம அச்சே... இப்படி எல்லாம் இருப்பதாலேயே, ஆன்மா, ஜீவன், மூச்சுக் காற்று ஆகிய யாவையும் உயிர் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றது நம் தமிழில்.

     இப்படியுள்ள இந்த ஒற்றிவாழ் அகமுடையானுக்கு, என்ன பெயரோ என்று கேட்டால், மேற்கே செவ்வானம் படர்ந்த நேரத்தை அந்தி என்கின்றோமே, அந்த வண்ணம் உடையார், அந்திவண்ணர் என்றே கூறப்படுகின்றார் ஆம். இந்த அந்தி வண்ணர் என்ற பெயர் செவ்வொளியை, வெகு விரைவிலே மங்கி மறைந்து போகும், நிலையற்ற ஒன்றையா இவர்க்குக் காரணப் பெயராக கற்பிப்பது...அது அவ்வளவு சரி அல்லவே...இதன் உட்பொருள் வேறு ஒன்றாக இருக்க வேண்டும். அது என்ன ?

          அந்தி வண்ணர் என்பதை அம் தி, அம் தீவண்ணராகக் கொண்டு ஆய்ந்திடலாம். அம் என்பது அ உ ம், ஓம் என்று விரிவுறும். இந்த ஓங்கார பிரணவ ஜோதியாகவே நம்பதி அனாதியே இருந்து கொண்டு யாவையும் புரிந்து கொண்டுள்ளார். இந்தப் பிரணவ ஜோதியை அருளாலே தான் கண்டு, அனுபவத்திற்கொண்டு ஆனந்திக்கலாகும். ஆகவே, நம் பதிக்கு அந்தி வண்ணர் என்ற பெயரைவிட, அருட்பெருஞ்ஜோதி ஆகக் கொண்டு கூறுவதில் சரியான பெயர்க் காரணம் விளங்குவதாம்.

           ”நீங்கள் எல்லாம் தெரிந்தவர், அதிகம் கற்றவர், (கேள்விக்குப்) பதில் கொடுப்பதில் மிகவல்லவர். ரொம்ப ரொம்ப பேசுகின்றீர்கள்” என்று தலைவி கூறினாள். விடைக்குக் கருத்தா என்றது, அருள் சக்தியாம் ரிஷபத்திற்கு தலைவர் என்பதைக் குறிப்பது. இந்த அருள் அனுபவம் வழங்கி ஆன்மத் தலைவியை இன்பில் தழைக்கச் செய்யாது இருளிலும்,  மருளிலும், ஏன் சொற்பிரபஞ்சத்தில் வீணில் அலைக்கழிக்கின்றீர் எனப் பேச்சுத் திறமைக்கே குற்றங்காண்கிறாள். இது கேட்ட தலைவர் “நீ பேசுவது சரியல்ல, முறையல்ல, ஏறுக்கு மாறானது” என்கின்றார்.   இதன் கருத்து என்னவெனில், ஓர் ஆன்மாவுக்கு அருள் அனுபவம் வழங்கப்படுமுன், உலகில் கீழிருந்து எல்லா வழியிலும் சுக துக்கங்களை வாழ்ந்து வாழ்ந்து பட்டுத் தெளிந்துதான் மேனிலைக்கு வந்து இறை இன்பநிலை அடைய வேண்டும் என்பதுதான் விதிமுறையாம். அந்த நியதிக்கு மாறாக, சும்மா அருள்செய், அருள்செய் என்று, உலகியலை மறுத்து, வேண்டினால் அது எப்படி பொருந்தும். அதுதான் இடக்குப் புகன்றாய் என்கின்றார்.          

             இன்றைய உலகிலே மக்கள் அருட்பண்பாடு அடையாமல், மருளிலும், இருளிலும் இருந்து கொண்டே, செய்கின்ற பக்தி வழிபாடுகளும், தான தருமங்களும், ஞான சாதனைகளும், விஞ்ஞான சோதனைகளும் மற்ற மற்ற செயல்களும் ஏன் நற்பயனை விளைவிக்கின்றதில்லை ? கடவுள் ஏன் செவி சாய்த்து அருள்பாலிக்கின்றதில்லை என்றால் உண்மையான தயவு மக்கள் உளத்திலிருந்து எழுந்து செயல்படாததே காரணமாம்.  “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். இவனையும் இவன் படும் பாட்டையும் நேராகக் கண்டால் தான் அந்த ஆண்டவனுக்கு இவன் மீது கருணை பிறக்கும்” என்ற எண்ணத்தில் ஓலமிடுகின்றான் மனிதன். கடவுளையும் அவரது தனிப்பெருங்கருணைச் செயலையும் இந்த மனிதன் தன் கனவிலேயும் அறியாதவனே. இவனை நல்வழிப் படுத்தத்தான் இடையறாது இவனுக்கு அகமும் புறமும் சூழ்ந்து அருள் வழிக்கு வரப்பக்குவப் படுத்திக் கொண்டிருக்கின்றார். இவன் அவர் வழிக்குத் திரும்பிவிட்டால் எல்லா நலமும் பெறுவது திண்ணம். மாறுபாடான முறையில் நடந்து கொண்டு, இடக்கு பேசிக் கொண்டிருந்தால் எப்படி நலம் உண்டாம்.    இடக்கு என்பது மாறுபாடான, முரணான செயலாம். திருவுள்ளத்திற்கு இணங்கி, எதிர்ந்து கொள்ளாது நடந்தால், இறைவன் நற்கருணை பாலிப்பது திண்ணம்.
IMG-20170527-WA0084.jpg

IMG-20170527-WA0084.jpg