Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல்.பாடல் எண்.6க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
   பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
   விளையாட்டென் பதுஞானம் விளையும்விளை யாடே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
   பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடஎன் நொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.                         (திரு அருட்பா)

(விளக்கம்)

     சித்த சிகாமணி ஆகிய நடராஜ பதியாம் அருட்பெருஞ்ஜோதி முன் உற்று இருந்து கொண்டு, இப்படிப் பலவாகத் தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டு வேண்டிக் கொள்ளுகின்றார் இராமலிங்கப் பெருமான்.

     உலகில் பொய்யுடையார், அதாவது மாயா தேகத்தோடு கூடிய பொய்யான புலபோக இச்சையுடையவர்களே ஆவர். அவர்கள் விரும்புவதெல்லாம் அற்ப சேர்க்கை இன்பமே. அதற்கானவர்களையும் அழிபொருள்களையும் மிக இச்சிக்கின்றார்களாம். அப்படி ஒன்றும் தான் விரும்பவே இல்லை என்று பொருள்படக் குறிக்கின்றார் முதலில். அத்தோடு வான்காண விழைந்தேனோ...என்கின்றார். வான் என்ற சொல் சிறப்பு, அழகு என்ற கருத்தில் கையாளப்பட்டுள்ளது ஈண்டு. அதனைத் தான் விரும்பவில்லை என்பதையே உணர்த்துகின்றார்.

         இவர் உண்மையில் விரும்புவது என்ன ? என்றால், அந்த சத்திய ஞான ஜோதி சொரூபி ஆகிய பதியே தன்னோடு விளையாட வேண்டும் என ஆசைப்படுகின்றார் ஆம்.  இந்த விளையாட்டு, சிறு பிள்ளை விளையட்டோ, அல்லது பொழுது போக்குநர் ஆடும் ஒரு விளையாட்டோ அல்ல, விளையாட்டு, என்பது ஞானம் விளையும் விளையாட்டே என்று அடுத்து எடுத்துக் கூறித் தெளிவுபடுத்திவிட்டுள்ளார். ஒருவன் இந்த உலகில் தோற்றுவிக்கப்பட்டுள்ளதின் காரணமே, நல்லொழுக்கம் பயின்று, நல்ல பழக்க வழக்கங்களால், நல்ல அறிவும் அனுபவமும் அடைந்து முடிவில் இறை இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதேயாம். இந்த இறையாணையை உளங்கொண்டு தயா இயல் வாழ்வு வாழ்வதே உண்மை விளையாட்டாகும். இதனால், விளையாட்டே மெய் விளைவாகும் என்பது அனுபவம். இதனை உலகர் “விளையாட்டே வினையாகும்” என்று மாறுபடக் கொள்கின்றனர். கடவுளின் திருவிளையாடல், லீலை, லீலா வினோதச் செயல் என்பனவெல்லாம் ஞானானுபவ லட்சியச் செயலேயாகும்.

           கடவுள் எல்லோரையும்தான் பண்பாடடையச் செய்தற்பொருட்டே, தோற்றுவித்து, வினைப் போகங்களை முறைப்படி ஊட்டி, வளர்த்து வருகின்றார். பையுடைய பாம்பு அனையர், அதாவது, சிலர் நச்சுப் பையுடைய படநாகம் போன்ற தன்மையராய்ப் பலர்க்கும் அச்சத்தையும், தீங்கையும் விளைவிப்பவர்களாயுள்ளனர். அப்படிப்பட்டவர்களின் உள்ளிருந்தும், ஆடிக் கொண்டும், அவர்களை ஆட்டி வைத்துக் கொண்டும் இருக்கின்றார் ஞான நடனபதி. நல்லோர்களின் நற்பண்பினைக் கண்டு, நெருங்கிய நட்பு காட்டி நலம் வழங்கி வருகின்றார். அப்படிப்பட்ட நட்பு உறவு நம் வள்ளலார் பால் கொண்டுள்ளதை நன்கு உணர்ந்தே கூறுகின்றார். தன்னோடு இன்னே, இப்போது கலந்து கொண்டு தெய்வ நடம் ஆடும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றார்.

          ‘செய்யுடை என்னொடு கூடி, ஆட எழுந்தருள்வாய்’ என்பதன் பொருள், ஆனந்தானுபவம் உண்டாம்படி, இந்தச் செய் என்னும் மண்ணுலகில், மண்ணுடம்பிலே கலந்து, பொன்னுடம்பாக ஆக்கிக் கொண்டு ஆனந்தத் திருநடனம் புரிந்து கொண்டிருத்தல் வேண்டும், என்பதுதான் வள்ளலார் விழைவு ஆம்.

                இந்த ஆனந்தானுபவ வாழ்வு தான் ஆதியிலேயே மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால், இந்த ஆன்மாவின் பரிபாக நிமித்தம், எத்தனை பிறவிகளில் எப்படி எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப்படுகின்றான் இந்த மனிதன்.    முடிவாக இப்போதுதான், ஆன்ம அகமுடையான், தன்னை முற்றிலும் இவனில் நிறைத்துக் கொண்டு, வெளி நிரம்ப உள்ள ஆன்மாக்களுக்கெல்லாம், நித்திய இன்பானுபவத்தை விளைவித்துக் கொண்டு திகழத் திரூவுளம் கொண்டு வெளிப்படுகின்றது உண்மை.


vlcsnap-2018-04-22-19h59m01s761.png

vlcsnap-2018-04-22-19h59m01s761.png