Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
மனத்தின் அனாதி நிலை..சுவாமி சரவணானந்தா.
மனத்தின் அனாதி நிலை...(தியானமும் தியாகமும் என்ற நூலிலிருந்து)

சுவாமி சரவணானந்தா.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     மனத்தை அறிவுணர்வாக அறிகின்றோம். இது எப்படித் தோற்றியுள்ளது என்பதைச் சற்று ஆய்ந்து காண்போம். உயிர் உணர்வு, ஓரறிவு முதல் ஆறறிவு நிரம்பிய எல்லாச் சீவர்களிடத்தும் காரியப்படுகின்றது. மக்களினம் நீங்கலாகப் பிற எவ்வுயிரிடத்தும் அறிவு விளக்கம், ஐம்புலன் எல்லை கடவாதிருக்கின்றாது. இம் மனிதப் பிறவியில் தான் அவ்வறிவு அவ்வைம்புல எல்லையைக் கடந்து ஆறாவதாகிய இம்மன அறிவு நிலையை அடைந்திருக்கின்றதாம். அதாவது மனித உயிரின் அறிவு விளக்கம், மனோ உணர்வாய்த் திகழ்கின்றது எனலாம். இந்த மன அறிவு விளங்குவதற்கு இந்த மனித தேகம் கூடி விளங்க வேண்டி இருக்கின்றது. இத்தேகம் உடன் விளங்கவில்லையானால், உயிரும் உணர்வும். அறிவும், அனுபவமும் வெளிப்பட்டிலங்க முடியாதுபோம். மேலும், உடல் புறந்தோன்றி வளர்ந்தோங்கி, அக அறிவனுபவம் கொள்ளற்கு, உள்ளிருந்து உயிராற்றல் உதவிக் கொண்டிருப்பதையுணர்கின்றோம். அகத்திருக்கும் உயிர் ஆற்றல் செயல்படுவதால்தான், அவ்வுயிரைச் சூழக் கருவுருத் தோன்றி வளர்ந்து, சிசு வடிவாகிப் பிறந்து ஆணெனப் பெண்ணென விளங்குகின்றது, இம்மனித இனம். அகமிருந்து செயல்படும் உயிர் ஒடுங்கி விட்டால், உடல் பயனின்றிக் கெடும். உயிரும் அனுபவத்திற்கு வழியின்றித் தோற்றமின்றி மறைவுற்றுக் கிடக்க நேரும். மேல் அவ்வுயிரனுபவம் உண்டாக வேண்டியே, அகநிலை நின்று திருவருளால் அடுத்த ஒரு உயிருடம்பு ஆணை செய்யப்படுகின்றது. அப்பொழுது உயிர் ஆற்றல் காரியப்பட, ஒரு கருவிலுருவாகி வெளிப்படுகின்றதாம். இதிலிருந்து நாம் யூகித்தறியவுள்ளது யாதெனில், ஓர் உயிரணுவாகிய ஆன்மாவில், கடவுட் பெருஞ் சக்தி நிலையாயிருந்து, உயிராற்றலை வெளிப்படுத்தி, உடலுருவை ஏற்று விளங்குவதும், பின்னர் ஓர் குறிப்பிட்ட காலத்திற்குப்பின் உடலினின்று உயிராற்றலையுள் வாங்கிக் கொண்டு, அத் தேகத்தை விட்டு விடுகின்றதென்றும் அறிகின்றோம். மேலும், இந்தக் கடவுட் சிற்றணுவேதான், அழிவற்ற ஆன்மாவாக இருக்கின்றதென்றும், இதற்கு இம்மனிதப் பிறப்பு வடிவம் சார்ந்திலங்கும் போது, உயிரிடத்து மன அறிவு விளங்குகின்றதென்றும், அவ்வடிவம் நீங்கிடும்போது, அவ்வறிவும் உடனாய் உள்மறைந்து போகின்றதென்றும் அறிந்து கொள்ளுகின்றோம்.

     கடவுள், ஆதியந்தமில்லா அனாதி நித்திய பரம் பொருள் என்பது மெய்ஞ்ஞான அனுபவம். அவ்வனாதி பரம்பொருளேதான், தன் உண்மையை வெளிப்படுத்தற் பொருட்டு, ஆன்ம சிற்றணு வடிவாய் இம்மனித உருவேற்றுள்ளார் இப்பொழுது. இககடவுள் அணுவுக்குப் பிற இடத்தில், அதாவது சடபூத நிலையிலோ, கீழான உயிர் உணர்வு விளங்கிய சீவ நிலையிலோ பரஞான அனுபவம் உண்டாக இடமில்லாதிருந்ததாம். இத்தருணம் இந்த மனித தேகம் ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தால், இதுவரை வெளிப்படாத இந்த இறைஞானம் பக்குவ மன நிறையுருவாய்த் தோற்றியுள்ளதாம். இவ்வறிவு உணர்வு அகமன்னிய கடவுள் அருள் ஆற்றலேயாகும். அனாதி இயற்கையாயுள்ள கடவுளுக்கு இவ்வருட் பேராற்றல் கூட இயல்பாக அனாதி நித்தியத் தன்மையாகவேயுள்ளதாம். ஆன்மா வென்பதும் அக்கடவுட் சிற்றணு வண்ணமாயிருத்தலின், அவ்வருட் சக்தியே அனாதி இயற்கைத் தன்மையாயுள்ளதென அறிகின்றோம். ஆகவே, ஓர் ஆன்மாவினின்று வெளிப்பட்டு விளங்குகின்ற உயிருணர்வறிவும் கூட இறையருளின் கூறே என அறியப்படும். மனிதனின் பக்குவ மன அறிவின் நிறை நிலை இறையருள் ஆற்றலேயன்றி வேறல்லவாம். இறையும், அவர் தம் அருளும் அனாதியாயுள்ளதால், அவ்வருள் வண்ண ஆற்றலாகிய மனித மனம் உண்மையில் அனாதியானதே எனத் தெளிதல் வேண்டும்.
vlcsnap-2018-02-27-17h00m11s234.png

vlcsnap-2018-02-27-17h00m11s234.png

Thangaraj Aru
நன்று உயிர் தாேன்ற காரணமாயுள்ள பெறு சக்தியும் தாேன்றும் விதம் பற்றியும் கூறியுள்ள உள்ளக ஆய்வு மிக ஆழ்ந்து சிந்திக்க தக்கது
Thursday, May 10, 2018 at 05:40 am by Thangaraj Aru