Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கிதமாலை பதிகத்துக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட அருள் உரை.
இங்கிதமாலை பாடல் எண்.6...இயற்றியவர் திரு அருட்பிரகாச வள்ளலார்.

கோமாற்கு அருளும் திருவொற்றிக் கோயிலுடையார் இவரைமத
மாமாற் றியநீர் ஏகலவி மகிழ்ந்தின்று அடியேன் மனையினிடைத்
தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் தாவென்றார்தந் தாலென்னை
ஏமாற் றினையே என்கின்றார் இதுதான் சேடி என்னேடி.

உரை..சுவாமி சரவணானந்தா.

ஆன்மாவாம் திருவொற்றிக் கோயிலில்தான் அருள் அனுபவம் வெளியாம் போது, முப்புரம் அழித்து, முத்தேக சித்தி ஏற்படுகிறது. இதுதான் கோமாற்கு அருளியதாம்.

மதமாவை அழித்தது, யானையைச் சங்கரித்தது, யான் ஐ, யானே தலைவன் என்ற அகங்கார போத போதகமாம் யானையை அழித்தது என்பது, உண்மையில் நான் என்ற அகங்கார ஒழிவேயாம்.

இந்த தற்போதம் ஒழிந்தால், இந்த நாமாகிய ஆன்மா, தாமேயாக விளங்குவதை யுணர்த்தும். அவ்விடத்தில், அவர் என்றும் நாம் என்றும், நீ என்றும், நான் என்றும் சொல்லற்கு இருநிலை இல்லையாம். இந்த அனுபவத்தோடு இவ்வுடலில் தங்கும்படி வேண்டிக் கொள்ளப்படுகின்றது. “நீர் ஏகல், அவிமகிழ்ந்து, இன்று அடியேன் மனை இடத்தே, தாம் மாற்றிடக் கொண்டு (இரும்) ஏகும்,” என்று விண்ணப்பித்துக் கொள்ளப்படுகின்றது. நீர் ஏகல் என்றால், நீங்கள் போகாதீர்கள் என்பதாம். நீரே கலவி மகிழ்ந்து இரும் என்றால் நீங்களே இரண்டறக் கலந்து இன்புற்று இருங்கள் என்று கூறப்படுவதாம். தாமாற்றிடக் கொண்டேகும் என்றால் நீங்களே நான் ஆகி என்று விளங்கிடக் கொண்டு இருங்கள் என்பது பொருளாம். அவர் தா என்று சொல்லுகின்றார். நான் தந்தேன் என்று; என்னை மறந்து நிற்கிறேன். அப்படிச் செயலற்றிருப்பதா இங்கு இன்பம், இங்கு இதம்? இதுவல்ல இன்பம், உன்னை நீ ஏமாற்றிக் கொள்ளாதே என்கின்றார். அவர் தா என்றது, உண்மையில் அவரோடு ஒன்றாமல் ஒன்றி நிற்கும் நாமும், அவர் போன்றே சதா தயவு செய்து கொண்டே இருக்கும்படி இங்கிதமாய்க் குறித்ததாகும். ஆகையால், நாம் அகநின்று பிரிவற இருந்து அனகமாகத் தயவு செய்து கொண்டு வாழ்வதே நம் கடமையும் அவர் ஆணையுமாம்.
20150520_154927.jpg

20150520_154927.jpg