Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தயவுப் பேருபதேசம்...சுவாமி சரவணானந்தா.
தயவுப்பேருபதேசம்..

சுவாமிசரவணானந்தா.

தயா பெருஞ்ஜோதியாய், அகண்டமாயுள்ள, ஒன்றான பரம்பொருள், நித்தியமாய் இருந்து கொண்டுள்ளது. அதுவே, இம்மனிதச் சிர நடுவே தனிப்பெரும் தயவு ஒளி விளக்காய் வெளிப்பட்டு விளங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தக் காண்பரிய நித்தியக் கடவுள் ஒருவரே, இப்படி எண்ணரிய மனித சிற்சபையிலே வெளிப்பட்டு, வெளிப்பட்டு, பக்குவ மனிதனில், அற்புதானந்த சித்திகளைக் காட்டிவிட்டு, மறைந்து கொண்டே இருக்கின்றது. எது இருக்கின்றது ? ஆம், அந்த ஏக பரம்பொருளே அன்றி வேறு எதுவும் அல்லவாம். இந்த உண்மையைத்தான்..இன்று, அதுவே உணர்த்த உணர்ந்து கொண்டு உள்ளோம்.

தனிப்பெருந்தயவு ஒளியாய், நம் கருவிலே வெளிப்பட்டு, நம் உயிராய், உடலாய், உணர்வாய், மொத்தத்தில் நாமாக விளங்கிக் கொண்டும், உணர்ந்து கொண்டும் இருக்கின்றதாம். ஆகையால், உண்மையில் அதுவே நாமாய் ஒவ்வொருவருமாய், மற்ற எக்காலத்தும், எவ்விடத்தும் விளங்கும் எவருமாய் எதுவுமாய் இருந்து வருவதும், அந்த ஒன்றான பதியே என்பது திண்ணம்.

இத்திண்ணமான எண்ணம் வந்தபின், கடவுள் ஒளிவடிவாய், தயவு ஒளியாய் விளங்கிக் கொண்டுள்ள நாம், ஏகபதிமயமாய், நித்தியமாய் இருந்து கொண்டு; பலப்பல, மக்களாய், உயிர்களாய்ப் பொருள்களாய் அளவு கடந்த நெடுங்காலமாக வெளிப்பட்டுக் கொண்டே உள்ளோம். எதற்காக இப்படி இதுவரை விளங்கி வந்துள்ளோம் என்றால், இந்த ஏகபர, தயவு உண்மையை, உள்ளபடி உணர்ந்து அதுவாகவே இருந்து கொண்டு நம் சொரூப, ரூப, சுபாவம் எல்லாம் தயவு மயமாக நிரம்பப் பெற்று, தயவுச் செயலோடு என்றென்றும் வாழற்கே ஆம்.

இதனால், இனி வீணில் காலத்தைப் போக்காது, சமய மதக் கொள்கை கோட்பாடுகளிலே ஆராய்ச்சி, அரசாட்சி, பொருளாட்சி, முயற்சிகளிலே மனதைச் செலுத்திக் கொண்டு, உழலாமல்,, சுத்த தயவு வாழ்வு மேற்கொள்ளுதல் வேண்டும் ஒவ்வொருவரும். ஜீவ தேகாதி பிரபஞ்சத்தையும் சூழ்நிகழ்வுகளையும் த்யவு வாழ்வுக்கே பயன்படுத்திக் கொள்ளல் நன்றாம்.

உபதேசம் என்றால், உண்மையில், நம் உயிர் உடம்பின் தலை நடுவுள், உகர அகர நடு ஒளிர் பகரப் புள்ளியின், கடவுட் ஜோதி நிலையே ஆம். இதுதான் உ+ப்+அ = உப ஆகித் தேசு ஒளியாய்த் திகழ்வது. இக்கடவுள் ஒளிதான், நமது தயாபெருஞ் ஜோதியின் தனிப் பெருந்தயவுச் சுடராக விளங்கிக் கொண்டேயுள்ளது. நாம் இத்தயவு ஆக நிற்கப் பழகுதல் முதற் செயலாம். இவ்வொளியே நம் கடவுள் ஆன்மாவாய், அதினின்று உயிர் உணர்வு அறிவாய், இவை விளங்கும் நம் உடலாய் விளங்குகின்றனவாம்.

தயவு ஒளி உள்ளிருந்துதான், ஆன்ம, ஜீவ கரண, இந்திரியங்களில் விரிந்து செயல்படுகின்றது. இது பரோபகாரச் செயல்முறையாம். இதற்குமுன், தயா உணர்வு அடிப்படையில், இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்கம் ஏற்கப்பட வேண்டும். இத் தயாவொழுக்கத்தோடு இருந்தால் தான் உண்மைத் தயவு ஒளி சிரநடு விளங்கும். இவ்வனுபவம் உண்டாகாதவரை அவ்வொளிக்கு அயலாய் இருந்து, நினைப்பதும், மறப்பதும் உழல்வதுமாய் இருக்கும். அபக்குவத்தில் புருவ நடுவிருந்து, சிரநடு ஒளியை எண்ணி, எண்ணி அது ஆவது சாதனை சாத்தியம் உறுவதற்கேயாம். சாத்தியானுபவ நிலைநின்று தயவுச் செயலோடு வாழ்வதே உபதேச முறையாகும்.

தயவு இயல்போடு, புலன் இச்சை இல்லாது, உள் ஒளியில் இருந்து பழகினால் தேக கரணங்களில் சுகமும் தெளிவும் ஏற்படும். ஆகையால், தயவு ஒளியாய் இருந்து கொண்டு, கண், நாக்கு, மூக்கு, செவி, மெய் இவற்றின் மூலம் தயவுச் செயலே புரிதல் வேண்டும். இது தயா இந்திரிய ஒழுக்கமாக அமையும். மனோசிந்தனையில் தயா உணர்வு செயல்பட்டு விளங்கும்போது, அது தயாகரணவொழுக்கமாக விளங்கும். தயவு நிலை நின்று எவரையும் விருப்பு வெறுப்பின்றி சம நோக்கோடு பார்த்து, நேர்ந்தமட்டில் தயவுச் செயலால், உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் செய்தல் உண்மை ஜீவகாருண்ய ஒழுக்கமாக உள்ளதாம். இதற்குமேல், தன் தயவு நிலை, கடவுள் வண்ணமாய், எங்கும் தானாய் இருந்து கொண்டு விளங்கச் செய்வதை உணர்ந்து சதா தயா நெகிழ்ச்சியோடு என்றும் விளங்குதல் தயா ஆன்ம ஒழுக்கமாகும்.

ஆகவே, தயவு மயமாய், உள்ளொளியாய் இருந்து கொண்டு, இந்திரிய, கரண, ஜீவ, ஆன்மாவின் மூலம் நால்வகை ஒழுக்கமும் விளங்கத் தினசரி வாழ்வு நடத்தப் பழகுதல்தான் தயவுப் பேருபதேசமாக அறிந்து கொள்வோமாக.

இவ்வுபதேச முறையைக் கொண்டு வாழாமல் வேறு வேறு நெறிமுறைகளை, பழைய புதிய பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடந்து வந்தால் ஏமாந்து போகவே நேரும். இதுவரை எவ்வளவு மக்கள், வாழ்விலே எப்படி எப்படியோ எல்லாம், அறிவும் ஆற்றலும், பெருமையும் புகழும், சீரும் சிறப்புமாய் விளங்கினவர்கள், இத் தயவு மேற்கொள்ளாததால் வாழ்வற்றுப் போனார்கள் என்பது உண்மை. வள்ளல் சன்மார்க்கம், இத்தயவு மூலம் உலகவர்க்கெல்லாம் உதவ வருகின்றது. பசி நீக்கி, உயிர் விளக்கம் செய்யும் ஜீவ காருண்ய ஒழுக்கத்தால், உலகியல் வாழ்வு சிறப்பது உண்மையே. பசியினால் ஏற்படும் பலவாகிய அவத்தைகளும் கேடுகளும் உணவு கொடுத்து மாற்றி உயிர் விளக்கம் பெறச் செய்தல் நல்லதே. அதற்குமேல், மரணத்தால் ஏற்படும் கொடுமையும், இழப்பும், நட்டமும், எவ்வளவு பெரியதாய் இருக்கின்றன.. இறப்பு, இழப்பு, சரி செய்ய முடியாத ஒன்றாயுள்ளது. அக்கொடிய மரணத்தை அடியோடு ஒழிந்து போகச் செய்து அழிவில்லாது ஆனந்தமாக என்றும் வாழச் செய்ய வந்துள்ளது, சுத்த தயவு சன்மார்க்கம் இதனால், இந்நெறி உலகுக்குப் பொதுவான, புதிதான ஒன்றாய் இருக்கின்றது.

அழியாக் கடவுள் இன்ப வாழ்வு இவ்வுலகிற்கு ஏற்படுவது பற்றி எண்ணமிட்டுக் கொண்டும், சந்தேகப்பட்டுக் கொண்டும், அசட்டை செய்து அலட்சியப்படுத்திக் கொண்டும், இருக்க வேண்டியதில்லை. ஏனெனில், வருங்காலத்தில் உண்டாகப் போகும் லட்சிய இன்பப் பெருவாழ்வை விட, இன்றைய உலகியலில் இத்தயவு நெறி முறையால் எவ்வளவோ பெரு நன்மையும், அமைதி நிறைந்த இன்ப வாழ்வும் உண்டாவது நிச்சயம். ஆகையால் அதனைத் தயவு செய்து எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுவாமி சரவணானந்தா.

20150520_154927.jpg

20150520_154927.jpg

Download: