Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் திறவுகோல். சுவாமி சரவணானந்தா.

அருட்பெருஞ்ஜோதி திறவுகோல்…

சுவாமி சரவணானந்தா.

அருட்பெருஞ்ஜோதியே அகண்ட வெளிநிறை கடவுள் உண்மை. அது நம் அனுபவத்தின் பொருட்டு, நமது தலை நடுவுள் தீபம் போல் எழுந்தருளியுள்ளது. அத்தீப ஒளி நடுவில் எல்லாம் வல்ல தனிப்பெருங்கருணையோடு வெளிப்பட்டு நம்மை வாழ்விக்க இருக்கின்றது. ஆகையால், அதனைப் போற்றிப் பணிந்து உளம் கொண்டு உய்ய வேண்டுவது நம் கடமை. இதற்கு, நாம் ஒருமையோடு புருவ நடுஇருந்து துதித்துத் துதித்து உள்ளொன்றி நின்று பழக வேண்டும். இதனைக் குறிக்க சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. புருவத்திடை இருந்து தலை நடு அருட்ஜோதியைத் துதித்தால், அத்தீப நடு இறைவன் எழுந்தருளி ஆட்கொள்ளுவார். அவ்விளக்கு ஒளியின் பிரதிபலிப்பே, நாமாய் இருந்து வேண்டுவதால், அதுவே நம் மூலம் ஒலிக்கின்றதாக அறிவோம்.

2. அகவல் அடிகளை ஒலித்து, அதுவாகி ஒரு நொடி நிற்றல், ஞாபகத்தில் இருக்கச் செய்தல் வேண்டும்.

3. அப்படித் தொடர்ந்து ஓதும்போது, அங்கங்கு நின்று, நின்று, ஞாபகம் ஏற்படுத்திக் கொண்டு, மேல் செல்ல வேண்டும்.

4. இப்படி சில நாட்கள் பயின்று வந்தால் அருட்பெருஞ்ஜோதியை நம்மில் உணர்ந்து. அதுவே எல்லாம் அருள்வதாக உணரப்படும்.

5. இப்படி அருட்பெருஞ்ஜோதியை எப்போதும் இடையறாது உளம் கொண்டால் முடிவில் முழு அனுபவம் உண்டாகும்.

அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் போற்றி. அத்துடன் ஒன்றி நின்று நம்மை ஆண்டு அருள் புரிகின்ற முறை இதுவாம். வள்ளற் பெருமான், இப்படித்தான் ஆண்டவரை உளம் கொண்டு போற்றி, அதுவான அனுபவம் எல்லோரும் பெற அருளினது இவ் அகவல் துதிப்பாடல். ஆகையால் அவர் ஆணைப்படி பாராயணம் செய்து வந்தால், தனிப்பெருங்கருணையால் கற்பனை கடந்த தெய்வ நலம் எல்லாம் கண்டு, உலக சமுதாயம் முழுமையும், அன்பொடும், அருளோடும் ஒத்து வாழ்ந்து பெருநலம் பெறலாம்.

அருட்பெருஞ்ஜோதி, அகம் புறம் என இரு கூறாக இல்லாது, அருள் உணர்வுடன், அனகமாக எங்கும் நிறைந்து என்றும் எல்லோரையும் வாழ்விக்கவுள்ளது. இதனால், இந்த அருட்பெருஞ்ஜோதியே, இரண்டு படாத ஒன்றாய் தயவு என்றாகி,

“சித்திகள் எல்லாம் தெளிவித்து எனக்கே சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை” எனப் பெற்றுள்ளதை, மேற்படி அகவற் பாவில் குறித்துள்ளதையும் கண்டு கொள்வோம்.

இத் தயவுத் திறவுகோலைக் கொண்டு திறந்து அகம் நன்கு உணர்ந்து பெருவாழ்வு பெறுக உலகம் எல்லாம்.

சுவாமி சரவணானந்தா.



20140713_221310.jpg

20140713_221310.jpg

Download: