DAEIOU - தயவு
இங்கிதமாலை பதிகத்துக்கு திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி வெளியிட்ட அருள் உரை.
இங்கித மாலை பாடல் எண்.8.

கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றியதாம்
பண்கள் இயன்ற திருவாயால் பலிதா என்றார் கொடுவந்தேன்
பெண்கள் தரல் ஈ(து) அன்று என்றார் பேசப் பலியா(து) என்றேன் நின்
எண்கள் பலித்த(து) என்கின்றார் இதுதேன் சேடி என்னேடீ.

திரு அருட்பிரகாச வள்ளலார்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000

உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000

     புறத்தே அழகுத் தோற்றம் கொண்டு விளங்கும் ஒருவரில் மறைந்து இருந்து கொண்டு விளங்குபவர் நம் பதியே. திருவொற்றியாம் ஆன்மாவையே தனது வாழிடமாகக் கொண்டு, தன் உண்மையைக் காட்டாது, புறத்தில் மாறுபாடான தோற்றங் காட்டிக் கொண்டிருப்பது நம் அகமுடையானே ஆவார். இப்படி இருக்கும் இவரே காட்சிக்கு இனியனாய் முன் நிற்கும் கள்வன் எனப்படுகின்றார். இந்த மனிதன் தான், தன் கருத்தை எவ்வளவு இனிமையான தனதுவாய்ச் சொல் மூலம் வெளிப்படுத்தி, பலிதா என்று இங்கிதமாகக் கேட்கின்றாள்.

     பலிதா என்றால் சாதாரண அன்னத்தையா கேட்கிறார்? அப்படி நினைத்து, அன்னம் இடப்போனால், அவர் மறுக்கிறார். இந்தச் சோற்றுக்கா வந்தேன்? பெண்கள் தரத்தக்கது இந்தப் பலி, இந்த அன்னம் அல்ல, என்கின்றார். இது கேட்ட, வீட்டுக்குரியான், பேசப் பலியாது, என்று இருபொருள்படக் கேட்கிறாள். அதாவது, “நீங்கள் சொல்லுகின்ற அந்த பலியாது” என வினவியதாகவும், “நீங்கள் பேசும் பேச்சு ஏதோ சூதாக இருக்கிறது போலும். அந்த மாதிரி எல்லாம் பேசப்படாது. அந்தப் பேச்சு இங்கு பலிக்காது” என்பதாகவும் உள்ளதாம். அப்படி சொல்லக் கேட்டதும் அவர் பதில் சொல்லுகின்றார். “நினை எண் கண் பலித்தது என்று,: யாதெனில் நின் நெஞ்சமாகிய இதயத்தின் கண் பலித்த (பழுத்துள்ள) தாகிய ஜீவான்மக் கனியைத் தான் வேண்டினதாக இங்கிதமாய்க் கூறினதாம்.

     இதுபோன்ற இங்கிதப் பாடல்களை எல்லாம், நம் வள்ளற் பெருமான் இசைக்கின்ற போது, அக ஆன்ம உணர்வு நிலையில் இருந்து, அருள் இயல் செயல் உண்மையையே வெளிப்படுத்துகின்றார். கடவுளையும், தன்னையும், திருவருளையும், அடுத்துள்ள தன் போன்றவர்களையும், தலைவன், தலைவி, நற்றாய், செவிலி அன்னை, தோழி முதலியவர்களாகக் கற்பனை செய்து கொண்டோ, புறத்தோழியிடத்தில் சொல்லி வியந்து கொண்டோ இருப்பதாகக் கருதக் கூடாது.

     எல்லாமான கடவுளே தன் இன்பானுபவ வாழ்வை வெளிப்படுத்தற்கு என்றே இப்படி இந்த மனிதப் பிறப்பில் ஜீவான்மாவின் அனுபவம் யாவும் மனத் தோழியின் வழி வெலியாக்கப் படுகின்றன. மற்றபடி யாரையும் முன்னிலைப் படுத்திக் கொண்டு உரைப்பதாகக் கொள்ள வேண்டியதில்லை.
1432741756728.jpg

1432741756728.jpg