DAEIOU - தயவு
திருவடிப் புகழ்ச்சி (வரி 59க்கு) உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா..திண்டுக்கல்.
திருவடிப் புகழ்ச்சி வரி எண்.59க்கு, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் அளித்த உரைவிளக்கம், ஆடியோ வடிவில்...இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

திருவடிப் புகழ்ச்சி வரி.எண்.59.

உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

தணிவிலா அணுபட்ச சம்பு பட்சங்களில் சமரசமுறும் பூம்பதம்.

=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=00=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0

உரை விளக்கம்.

     திருவருள் ஆகிய திருவடி என்னும் பதம் இம்மனிதனில் அனுபவப்பட வெளியாகியுள்ளது. கடவுள் எங்கும் நிரம்பிய அகண்ட பெருவுருக் கொண்டிருப்பதும் அனுபவத்தின் நிமித்தம் அவர் தம் முழு உண்மையும் அப்படியே ஒவ்வொரு ஆன்ம சிற்றணுவிலும் இருந்து ஒளிரவும் வைத்துள்ளார். அருளின் பெருமைக்குரிய பெருஞ்செயல் இதுவாகும். உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளவர். அவரது முழு நிலை எப்போதும் பிரிபடுவதுமில்லை..நிலை குலைவதும்..கூடுவதும் இல்லையாம். ஆகவே அந்த சிதையுறாத பூரண வடிவையே அதன் எந்த ஒரு கூறிலிருந்தும் முழுமையாகவே அறிந்தும் கண்டும் அனுபவிக்கப்பட உள்ளதாம். அப்படி ஒரு குறிப்பிட்ட ஒரு சிறு கூறுதான் மனித வடிவில் கடவுள் ஆன்ம வடிவாக விளங்கி நின்று அக்கடவுள் நிறை வண்ணத்தை அறிந்தும், கண்டும் அனுபவிக்கின்றதுமாம். இந்த அணு நிலையும் அகண்ட பெரு நிலையும் அணு பட்சம், சம்பு பட்சம் என மொழியப்படுகின்றன.

     ஆன்மக்கடவுளின் சிற்றுறு, பேருறுவே இங்கு அணுபட்சம், சம்புபட்சம் என்று கூறப்பட்டுள்ளதாக அறிய வேண்டும். பெரிய உருவத் தோற்றத்தை சுருக்கி, அப்படியே மிகச் சிறிய வடிவமாகக் காட்டுதலும், சிறியதைப் பெரியதாக்கிக் காட்டுதலும் நாம் அறிவோம். கடவுள் தன் அருட்பெருஞ் செயலால் மகா பிரபஞ்ச உண்மை முற்றிலும் ஆன்ம அணுவில் அமைத்துக் காட்டியுள்ள பெருஞ்செயலை பெருஞ்சித்து என்பதோ பேரற்புதம் என்பதோ எல்லாம் திருவருளின் பெருமையே என உணர்ந்து அமைவாம். ஆன்ம சிற்றுருவும் அகண்ட வெளி நிறை கடவுட் பேருருவும் அளவில் வேற்றுமையேயன்றி இயல்பில் சரிநிகர் சமம் என அனுபவிகள் கூறுவர். அதுவும் கூட சரியான விளக்கவுரை ஆகாது. ஏனெனில், உண்மையில் கடவுள், இரண்டாகி விளங்குகின்றதில்லை. ஏகமாய்த் தான் இருக்கின்றவர் இறைவன். அப்படி இருக்கின்ற அவரேதான் எந்த ஒரு ஆன்மாவின் மூலமும் கண்டு அனுபவிக்கப்படுகின்றதால் ஆன்மாவிலிருப்பது ஒன்று, அகண்டத்தில் இருப்பது மற்றொன்று என இல்லையாகும். அருட்பெருஞ்ஜோதியான ஒருவர் பெருஞ்ஜோதி மயமாக புறம் நிறைந்திருப்பதும், அருள் இயல்பாக அகமிருந்து அறியப்படுகின்றதுமாயுள்ளார். ஆகவே அகத்தே அருட் பேரியல்பும் புறத்தே பெருஞ்ஜோதி உருவும் கொண்டு திகழ்கின்றது உண்மையாகும். அருளின் அளவும் அளக்க முடியாது. அதுபோல் ஜோதியின் அளவும் அளவிட்டறிய முடியாது. இதனால் அருளும் ஜோதியும் சரிபாதி பாதியாகக் கொள்கின்றனர். இது ஒரு சமரச இயல்பு. அணுபட்ச, சம்புபட்ச சமரசம் இதுவாம். அருட்பெருஞ்ஜோதி பதமே அணுபட்ச, சம்பு பட்ச, சமரசமுற்றிலங்கும் ஒன்றாகும்.
பஞ்சபட்ச சிருஷ்டிகளின் உண்மை வேறு ஆம். அவை அணுபட்சம், பரமாணுபட்சம், சம்பு பட்சம், விபு பட்சம், பிரகிருதி பட்சம் என்னும் ஐந்தாம். இவ்வாறு ஐவகை சிருஷ்டிகளில் முன்னிரண்டு சாதாரணமாம். நடுவது அசாதாரணம். பின்னிரண்டு சிறப்பாம். சாதாரணம் என்பது இயற்கை முறையாலும், மருந்து, மந்திர மணியாலும் ஏற்படுவது. அசாதாரணம், வாக்கு வெளிப்பட்ட அக்கணமே கருவுரு தொடங்கி வளர்ந்து காலத்தே வெளிப்படுவது. சிறப்பு முறையில் உடனுக்குடன் வெளியாகி வெளிப்படுவதும் அற்ப பொருளையே நினைத்த மாத்திரத்தில் மனிதனாய் உருவாகி விளங்கச் செய்தல். இவையெல்லாம் வள்ளலார் கொண்ட அனுபவத்தில் கண்டனவாம்.

 



vlcsnap-2014-09-06-12h32m02s188.png

vlcsnap-2014-09-06-12h32m02s188.png

Audio:

Download: