Karunai Sabai-Salai Trust.
உண்மைக் கடவுளின் இருப்பிடம், உருவம், செய்கை என்ன? -- APJ.ARUL
அன்பர்களே,

இது மிகவும் முக்கியமான இடம்.

சுத்த சன்மார்க்கத்தில் நமக்கு காட்டிய கடவுள் யாதெனில்;

“எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின், அக்கடவுள் திருவருள் நமக்கு கருத்தின் கண் வெளிப்பட்டு விளங்குமென்றும்” நமக்கு வள்ளலாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் மார்க்கத்தில் “அக அனுபவமே” உண்மை ஆகும் என்கிறார் வள்ளலார்.
என் மார்க்கம் “அறிவு மார்க்கம்” இந்நிலையில் நாம் எங்ஙனம் கடவுளின் இடம், ரூபம், செய்கைளைப் பற்றிப் படிப்பினால் தெரிந்து கொள்ள முடியும்?

உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் நமக்கு இதுவே கடவுள், இவையே சம்பிரதாயங்கள், இங்ஙனமே முடிவு என வியம்புகின்றன. இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சமய, மத மார்க்கங்களில் நம் அறிவிற்கு வேலையில்லை.

திருஅருட்பிரகாச வள்ளலார் தான் கண்ட கடவுளின் உண்மை (திருவுருவம்)கடவுளின் விளக்கம் (இருப்பிடம்) கடவுள் அருள் (செய்கை) இவை குறித்து அவர்பாடிய பாடல்களில், உபதேசக்குறிப்புகளில் மற்றும் விண்ணப்பங்களில் உள்ளவற்றை உள்ளபடி இங்கு காண்போம்.

அன்பர்களே! விண்ணப்பங்கள், உபதேசக் குறிப்புகள், சுத்த சன்மார்க்கப்பாடல்கள் மூலம் பதிவிளக்கத்தை இங்கு காணும் நாம் எந்தவொரு அனுபவத்தையும் பெற்றிட முடியாது என்பதை சத்தியமாக தெரிந்திடுவோம்.
அவாவின் வெளிப்பாட்டிலேயே படிக்க உள்ளோம். கடவுள் நிலை படிப்பினால் அறியக்கூடியதல்ல என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை இங்கு நினைவில் கொள்வோம். பின் எதற்காக இதை படிக்க வேண்டும்? என்பவர்கள் இப்பகுதியை விட்டுவிட்டு நல்லொழுக்கத்தை நிரப்பி இடைவிடாது நன்முயற்ச்சியை காலம் தாழ்த்தாது இப்பொழுதே தொடங்கிவிடுங்கள்.
அதே நேரத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒரு தனி நெறியை கொண்டிருக்கவில்லை. மற்ற சமய, மத மார்க்கங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுள் தேவர் கர்த்தர் முதலிய இவர்களில் ஒருவரையே வள்ளலார் ஆண்டவராக காட்டுகிறார் என்ற விவாதத்திற்கு இப்பகுதி விடையளிக்கிறது.
1) கடவுளின் சொரூபம்,
2) கடவுளின் இடம்,
3) கடவுளின் செய்கை
என்பவற்றிற்கான முடிபை அவ்வரிசையிலேயே காண்போம்.
அவைமுறையே;
1) இயற்கை உண்மை
2) இயற்கை விளக்கம்
3) இயற்கை இன்பம்
மேலும் முறையே;
1) சுத்த சிவானுபவவெளி
2) அருட்பெருஞ்ஜோதி சொரூபம்
3) ஓங்கிய சிவானந்த ஒருமைத்திருநடம்
மேலும் முறையே;
1) திருவுருவம்
2) சத்திய ஞானசபை
3) திருநடச் செய்கை

அதாவது,
“ஒர் சுத்த சிவானுபவ வெளியில், சத்திய திருவுருவாம் அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், சத்திய ஞானசபைக் கண்ணே எல்லா உயிர்களும் இன்பமடைதற்பொருட்டு சத்திய திருநடச்செய்கை”
இதுவே நடந்தது, நடந்துக்கொண்டேயிருக்கிறது.
அன்பர்களே!
இறைவன் விளங்குகின்ற நிலையை வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
“எல்லாச் சத்திகளும்,
எல்லாச் சித்தர்களும்,
எல்லாத் தலைவர்களும்,
அறிந்து கொள்ளுவதற்கு மிகவும் அரியதாய்,
எல்லாத் தத்துவங்களுக்கும்
எல்லாத் தத்துவிகளுக்கும்
அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதும் குறிக்கப்படாத தனிப்பெருந்தலைமை அருட் பெருஞ்ஜோதியராகி விளங்குகின்றவரே கடவுள்.”
வள்ளலார் கண்டு தெரியப்படுத்தியுள்ள இறைவனின் உண்மையை படிப்பினால் அறிந்திட முயற்ச்சிக்கக்கூடாது என்பதை இங்கு நாம் சத்தியமாக தெரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் திருவுருவம், திரு இடம், திருச்செய்கையை, நாம் உண்மையறிவில் தான் தெரிந்துக் கொள்ள முடியும்.
-- APJ.ARUL, Madurai,Tamilnadu,9487417834.

god place 2.jpg

god place 2.jpg