www.vallalarspace.com/durai
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்!”

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

நம்மவர்களுக்கு வந்தனம்! வாழ்த்துக்கள்!
வளமோடு இன்புற்று வாழ்க!!

திருக்குறளிலுள்ள ஒவ்வொரு குறலும் அதன்மேண்மை
பொருந்திய வாழ்வியல் உண்மைக் கருத்துக்களைஎந்த
ஒருஒளிப்பும் மறைப்புமின்றிப் படிப்பவர்க்கு நற்புரிதல்
தருகின்ற அந்தஉண்மையை நாம்அறிந் திருக்கக்கூடும்!

ஒருகுறளின் நற்கருத்தை மிகநன்றாக அறிந்திடஅந்தக்குறளிலுள்ள
சொற்பொருளும் ஒப்புமையின்நோக்கமும் தெரிந்திடல்வேண்டும்!

எடுத்துக்காட்டாக, குறள் எண் 131- ன் பொருளை எப்படி ஆய்தல் வேண்டும் என்று இங்கே நாம் இப்போது பார்ப்போம்.

‘ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.' - என்பது அந்தத் திருக்குறளாகும்!

இங்கு, ‘ஒழுக்கம்’ - என்பது நற்பண்பு, நன்நடத்தை, நல்வழியில் செல்லுதல் (Good conduct, morality, virtue, decorum) போன்ற பொருளில் நம் தமிழிலே அது பயன்படுத்தப் படுகிறது. நம்முடைய சன்மார்க்கிகளுக்கு இது நன்கு தெரிந்த ஒன்றுதான்.

‘விழுப்பம்’- என்பது விருப்பம், நன்மை, மேன்மை, சிறப்பு (Desire, a benefit, goodness, beneficence, Excellence, sublimity) என்ற பல பொருள்கள் தரும் பதமாகும்.

‘தரலான்’ - என்பதை ‘தரக்கூடியது’ அல்லது ‘தருவதாக இருப்பதால்’ என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.

‘ஓம்புதல்’ - என்றால் காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல், போற்றுதல்; உபசரித்தல், சீர்தூக்குதல் என்ற பல பொருள்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கக்கூடும்.

ஆக, “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” - என்றால், ஒழுக்கமானது உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்; அதாவது உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும் என்று அர்த்தம்.

இங்கு நம் வள்ளுவரின் ஒப்பீட்டு நுணக்கத்தை நாம் கூர்ந்து கண்ணுற்றால், ஒழுக்கத்தின் முக்கியத்துவமானது நமக்கு உள்ளங்கை நெற்கனியாய் விளங்கும். இந்த முக்கியத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுதான் இந்தக் குறளின் தனி நோக்கமாகும். அதைத்தான், நாம் இந்தக் குறளின் மூலமாக நன்கு புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

திரு வள்ளுவர், “நம்முடைய ஒழுக்கமானது இவ்வுலக வாழ்வின் எல்லா நன்மைகளுக்கும் மிகமிக அவசியமானது!” - என்பதை உள்ளதை உள்ளபடி நன்கு உணர்ந்தவர். ஆகையால்தான், அந்த ஒழுக்கத்தை மிகச் சிறப்பாக வழியுறுத்த வேண்டும் என்று முதலில் தீர்மானிக்கிறார். எனவே, அதை நம்முடைய ஒப்பற்ற அருமையான உயிரோடு ஒப்பீடு செய்கிறார். அதுவும், எப்படி ஒப்பீடு செய்கின்றார்? அந்த நம் அரிய உயரைவிட மிக உயர்ந்ததாக ஒப்பீடு செய்கின்றார்.

நமக்குத் தெரியும், உயிரோ போனால் வராதென்று. அந்த நம் உயிரைவிட உயர்ந்த ஒன்று எங்குமே இல்லை என்று! ஆகவே, ‘நம் உயிரைப் போகவிடாது பேணவேண்டும்!’ – என்று, நாமெல்லோருமே அரும்பாடு படுகிறோம்.

இந்தக் குறளிலே “நாம் நம்முடைய உயிரைப் போகவிடாது காக்க வேண்டுமென்று, அரும்பாடு படுவதைக் காட்டிலும், இன்னும் மேலாக அரும்பாடு பட்டாவது, நம்முடைய நல்ஒழுக்கத்தைக் காத்தல் வேண்டும்!’ – என்று, நம் வள்ளுவப்பெருந்தகை வழியுறுத்துகின்றார்கள்!

இதுதான், இந்தத் திருக்குறளின் தனிநோக்கம். அதுதான், நம்முடைய பொய்யாமொழிப் புலவரின் தனித்துவமாகும். அவர் ஏன் அவ்வாறு நம்உயிரைவிட, நம்ஒழுக்கத்தை, மிக உயர்வாகக் காக்கச் சொல்கிறார்? - என்பதை நாம் ஆய்வு செய்தால், நமக்கு இந்தத் திருக்குறளின் உள்நோக்கம் நன்கு விளங்கும்.

உயிர் மிக மேலானதுதான்! போனால் வராததுதான்! ஆனாலும், “அந்த உயிரால் ஒருவருக்கு ஏதாவது கிடைக்குமா?” - என்றால், ஒன்றும் கிடைக்காது. அதாவது, உயிரால் ஒருவருக்கு ஒன்றும் தரமுடியாது! இதுதான் அதனுடைய இயற்கை உண்மை.

ஆனால், ஒழுக்கமோ அப்படியல்ல! ஒழுக்கமானது எல்லா நண்மைகளையும் இந்த இகத்தே நமக்குத் தரவல்லது. ஏன்? இன்னும் அதனுடைய மேன்மையை, அதனுடைய தனிச்சிறப்பை, நாம் உள்ளபடி மிக உறுதியாகச் சொல்லவேண்டுமேயானால், நம்முடைய ஒப்பற்ற ஒழுக்கம்தான், அந்த நம் அருமையான ஆருயிரையே காக்கவும் வல்லதாகும்! ஒழுக்கம் தப்பும்போது உயிரும் தப்பிப்போகும். நாம் அதை அறிவோம்.

அப்படித்தானே, நம்முடைய வள்ளற்பெருமானும்கூட, நம்முடைய மரணத்தையே வெல்லக்கூடிய அந்த ஞானத்தைத்தரும் 'சாகாக்கல்வியை', “சுத்த சன்மார்க்க ஒழுங்கத்தினால் பெறக்கூடிய முக்கியமான நான்கு புருஷாத்தங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றார்கள். இல்லையா?

ஆகவே, நம்முடைய ஒழுக்கத்தை நம் உயிரைவிட மிகச்சிறப்பாக மதித்துப் போற்றுதல் வேண்டும்!

இன்னும் ஒன்றை இங்கே நாம் நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும். அது என்னவெனில்? வள்ளுவப்பெருந்தகை, திருக்குறளிலுள்ள அதிகாரங்களை மிகத்தெளிந்த ஞானத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றார்கள். அந்த வரிசைப் பாட்டின் சிறப்பை அறிகின்ற அனைவருமே ஞானிகள்தான்.

திருக்குறளில் ‘ஒழுக்கமுடைமை’ - என்ற அதிகாரத்தை, ‘அடக்கமுடைமை’ - என்ற அதிகாரத்திற்கும் அடுத்தபடியாக வரும்படிதான் வைத்துள்ளார். அப்படி ஏன்? - அவர் அதை வைத்தார், என்று சத்விசாரம் செய்து பார்த்தால், அப்போது புரியும் உண்மை! அதாவது, கண் முதற் பொறிகளையும், மனமுதற் கரணக் கருவிகளையும் நன்நெறியில் நடத்தும் முறை அறியாதவனுக்கு; அதாவது, அந்த அடக்கமுடைமை இல்லாதவனுக்கு, ஒழுக்கமானது சித்திக்காது என்பதுதான் அதன் உட்கருத்து.

இந்த இயற்கை உண்மையை, திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்துப் பகுதியிலேயே, நமக்குத் தெள்ளத் தெளிவாக வெட்டவெளிச்சமாகக் காட்டிவிடுகின்றார்கள்.

அந்தக்குறள்தான்,

'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.' - என்பதாகும்.

அதாவது, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக வருகின்ற எல்லாக் குற்றங்களையும் அறுத்துக் கடந்து, பொய்யில்லாத மெய்யான ஒழுக்க நெறியாகிய “சுத்த சன்மார்க்கச் செந்நெறி” - நின்று வாழ்கின்றவர்கள், இறப்பை வென்று நீடு வாழ்வார்கள் என்பதுதான் இந்தக் குறளின் திருக்குறிப்பாகும்.

இங்கு 'மெய் ஒழுக்கத்தின் பயனாகத்தான் நீள்வாழ்வு பெறமுடியும்!' என்ற அந்த அருட்கூற்றை நாம் நன்கு கண்டுகொண்டு, அந்தத் தெள்ளத் தெளிந்த அருளுணர்வை நாம் தீர்க்கமாகப் பெற்றுக் கொள்ளல் வேண்டும். வேறோர் மாற்று மார்க்கம் எங்குமே கிடையாது! சாகத் துணிந்தவர்களுக்கு வேண்டுமானால் இருக்கக் கூடும். வாழத் தெரிந்தவர்களோ சாகா வரம் என்பது நல்ஒழுக்கமே என்று நன்கு அறிந்து கொள்வார்கள்!

அதனால்தான், வள்ளற்பெருமானும்கூடத், 'தேவர் திருக்குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கின்றது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.' என்று கூறியிருக்கிறார்கள்.

'அந்தக் கிடைத்தற்கரிய சாகா நிலையை வழங்க வல்லது, நம்முடைய சுத்த சன்மார்க்க நல்ஒழுக்கங்களே!' எனவே, நாம் இந்த இயற்கையுண்மை சத்தியமாக நன்குணர்ந்து, நம் சுத்த சன்மார்க்கம் காட்டுகின்ற அந்த 'இந்திரிய கரண சீவ ஆன்ம' - ஒழக்கங்கங்களை, நம் உயிரினும் மேலாகப் பேணிக்காத்து நம்முடைய ஒப்பற்ற முடிவான அந்த அனகப் பேரின்பச் சித்திப் பெருவாழ்வைப் பெற்றுப் பெருலாபம் அடைவோமாக!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

வாழ்க சமரசம்!

வளர்க சுத்த சன்மார்க்கம்.

இங்ஙனம்,
உங்கள் அன்பன்
துரை சாத்தணன்

Audio:

2 Comments
Hariharan Elumalai
மிக்க நன்றி ஐயா. மேலும் மேலும் பல விளக்கங்களை எங்களைப் போன்ற சிற்றறிவாளர்களுக்கு வழங்கி எங்களைத் தெளிவிப்பீர்களாக.
Sunday, December 31, 2017 at 21:57 pm by Hariharan Elumalai
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Cheaters looters manipulators face humuilatuions smuglers man pen pon Asaikalay thunpathin muthal Padi ihuvay j,Jin mudivummm
Sunday, February 18, 2018 at 21:47 pm by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R