Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 4 - மூலமும் உரையும்
        வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 4 - மூலமும் உரையும்

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

இயற்றிவர் - புலவர் மா.க. காமாட்சிநாதன் அய்யா அவர்கள்

எளிய உரை: ஆனந்தபாரதி

வேறு

பாடல் 4:

வள்ளலார் "தொண்டமண்டலம்" நிறுவிய பெருமை!


தண்டமி ழமர்ந்திடுஞ் சான்றோர் இருந்துவச்

சபையூ டெழுந்தஐயம்

சாமிநீ தீர்த்திடத் தக்கதென் றேத்திட

தக்கநற் சான்றுகாட்டித்

"தொண்டமண் டலமென்று" கண்டவர் வியந்திடத்

தொல்காப்பியத் திருந்துந்

தோன்றுநூற் பாசொல்லி யூன்றிவைத் தப்புலவர்

தோத்திரம் பெற்ற பெரும!

மண்டலந் தன்னிலுயர் அண்டரென நிற்பினும்

மக்களைப் பாடிடாத

மாண்புடைய மாகவி, மாதேவன் வார்கழல்கள்

மறவாத சிவயோகிநீ

தண்டையணி காலசைத் தெண்டிசை மகிழ்ந்திடச்

சப்பாணி கொட்டியருளே!

சமயங் கடந்துவளர் சன்மார்க்க தேசிக

சப்பாணி கொட்டியருளே!


எளிய உரை:

சிறப்பு மிக்க தமிழ் மொழியைக் கற்றறிந்த சான்றோர் பலரும், அறிஞர் சபையில் வீற்றிருந்த நின்னை (வள்ளல் பெருமானின் திருச்சாமூகத்தை) வணங்கி "ஐயனே எங்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாகியுள்ளது அதனை நீங்களே தீர்க்கத் தக்கவர்" என்று வணங்கி நிற்க!

அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொண்ட நீர், தொண்டமண் டலமென்று அனைவரும் ஏற்கும்படியாக "தொல்காப்பியம்" முதலிய நூல்களில் இருந்து சான்று காட்டி அனைவரும் ஏற்கும்படி செய்ய அப்பெரும் புலவர் அனைவரும் நின்னை தோத்திரம் செய்து நின்றனர்,

இந்த பூலோகத்தில் இந்திரனைப்போல வாழ்பவராக இருப்பினும் அவர்களைப் பாடிடாத‌ (மக்களைப் பாடிடாத மாண்பு) மகாகவியே!

என்றும் மாதேவனின் (இறைவனின்) திருவடிகளை மறவாத சிவயோகியரே! நின் சிறுகால்களின் தண்டை அணி ஓசை எட்டுத்திசையும் கேட்டு மகிழும்படியாக சப்பாணி கொட்டி அருளுக‌!

சாதியும், மதமும், சமயமும் கடந்த பெருனிலையாம் சன்மார்க்கத்தின் தேசிகரே! சப்பாணி கொட்டி அருளுக‌!


வரலாற்றுப் பின்னனி:

அன்றோர் காலத்தில் தமிழ் அறிந்த சான்றோர் பலருக்கும் ஓர் பெரும் சந்தேகம் உண்டானது, அது என்னவெனில் "பல்லவ" நாடாம் சென்னை, காஞ்சி முதலிய நிலப்பகுதியை "தொண்டை மண்டலம்" என்று கூறுவது சரியா? அல்லது "தொண்ட மண்டலம்" என்று கூறுவது சரியா? என்பதே ஆகும்.

இவ்விவாதம் பலகாலம் தீராது, இதை தீர்ப்பான் பெருட்டு அறிஞர்கள் இவ்வழக்கை வள்ளல் பெருமானின் திருமுன்பு கொண்டுவர, நமது பெருமானார் "தொல்காப்பியம்",
பண்டைவழக்கு, கல்வெட்டு முதலிய சான்றுகாட்டி, எதிர்க்கூற்றுகள் அத்துனைக்கும் விளக்கம் அளித்து, "தொண்ட மண்டலம்" என்பதே சரி என நிறுவினார்கள்,

அதன் தொடர்ச்சியாக, "தொண்டமண்டல சதகம்" என்னும் படிக்காசு புலவர் எழுதிய நூலினை   1855-ல் பதிப்பித்து, "தொண்டமண்டல சதகம் : நூற்பெயர் இலக்கணமும்: அன்னூலின் "வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுக்கு உரையும், செய்து அருளினார்கள், அறிஞர்கள் வியக்கும் வண்ணம் நூற்பெயர் இலக்கணமும், வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுக்கு உரையும் இன்றளவும் விளங்கி வருகின்றன.

வடலூர்வள்ளலார் கல்விப்பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் "தொண்டமண்டல சதகம் : நூற்பெயர் இலக்கண மற்றும் வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுக்கு உரை"  அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாக்கி தனது பன்னாட்டு கருத்தரங்கில் 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு நூல்களையும் ஒலி நூல்களாக கீழ்க்கண்ட இணைய இணைப்பில் கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் இயலும்.

 2. தொண்டமண்டல சதகம் : நூற்பெயர் இலக்கணம்
(2. Thondamandala Sathakam Noorpeyar Ilakkanam )


3. வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை
(3. Vazhipadu Kadavul vanakkap Paaddurai)