Anandha Barathi
ஒழிவிலொடுக்க பாயிர விருத்தி உரையில் (வள்ளல் பெருமானார் எழுதிய உரையில்) உள்ள முக்கிய திருநெறிக் குறிப்புகள்: தொகுப்பு
ஒழிவிலொடுக்க பாயிர விருத்தி உரையில் (வள்ளல் பெருமானார் எழுதிய உரையில்)

உள்ள முக்கிய திருநெறிக் குறிப்புகள்:

தொகுப்பு: ஆனந்த பாரதி


முன்னுரை:

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,

ஒழிவிலொடுக்கம் காழிக்கண்ணுடைய வள்ளல் அவர்களால் எழுதப்பெற்ற ஒரு சிறந்த ஞான நூல், அதற்கு உரை செய்தவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள், இன்னூலின் அருட்சிறப்புக் கருதி நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் முதன்முதலின் பதிப்பித்தார்கள்.

அதனோடு, நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளுக்கு ஒரு விருத்தி உரையும், சிதம்பர சுவாமிகள் உரையில் காணும் அருஞ்சொற்களுக்கு உரிய பொருளும், நூலின் ஆங்காங்கே சில அடிக்குறிப்புகளும், நூல் இறுதியில் அமைத்துக் கொள்ளல் என்ற பெயரில் சில குறிப்புகளும் எழுதி 1851 ஆம் ஆண்டு சிதம்பர சுவாமிகள் உரையுடன் நமது பெருமானார் வெளியிட்டார்கள்.

இந்த நூலின் பாயிரத்துக்கு வள்ளல் பெருமான் செய்த விருத்தி உரையில் பல முக்கியமான அருள் நெறிக் குறிப்புகள் காணப்படுகின்ற, அதை அன்பர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு, அந்த அருள் நெறிக் குறிப்புகளை வினா விடை வடிவில் தொகுத்து அளித்துள்ளோம்,

மிக முக்கியமான பல அடைப்படை கோள்விகளுக்கு நம் வள்ளல் பெருமானின் நேரடி பதிலாக இவை விளங்குகின்றன,

ஒழிவிலொடுக்க பாயிர விருத்தியையும், நூல் முழுவதையும் அன்பர்கள் கட்டாயம் படிக்க வேண்டும், அதற்கு ஓர் தூண்டுகோலே இக்கட்டுரை.

சன்மார்க்க அன்பர்கள் படித்து, அறிந்து, உணர்ந்து பயன் பெருக! நன்றி.

ஒழிவிலொடுக்க பாயிர விருத்தி உரையில் (வள்ளல் பெருமானார் எழுதிய உரையில்)
உள்ள முக்கிய திருநெறிக் குறிப்புகள்:

(வள்ளல் பெருமான் அளிய விடைகள்)

வள்ளல் எனும் பெயர் – விளக்கம் என்ன?

வள்ளல் எனும் பெயர் தன் உறுப்புகளுள்

கொடை,

குணம்,

புகழ்,

அழகு,

வளம் என்னும் நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மை என்னும் முதலுறுப்பான் ஆசிரியர்க்கு உளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலின் பொருளாற்றல் உண்டென்க.

குருராயன் என்பது என்ன?

குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப் பெயராய் நின்று,

ஓதி உணர்ந்து பன்னாள் பலசாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத்தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப்பெற்றும், ஓரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை முற்றும் உணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானாசாரிய அருளிலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம்,

ஓதி உணர்ந்த அவ்வாசாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின் கண் அருளுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளி நின்று அனுக்கிரகித்தும் நின்றனர் என்பதூஉம்,

திருநோக்கஞ்செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையாலும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல், நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்த தென்று உணர்க.

(குறிப்பு: மேலுள்ள “குருராயனுக்கு” உள்ள பெருமானார் கூறும் இலக்கணம் முழுவதும் நமது வள்ளல் பெருமானுக்கு பொருந்தி வருவதை அன்பர்கள் கவனிக்க, எனவே நமது இராமலிங்க பெருமானும் “வள்ளல் குருராயரே” ஆவார்)

குரு என்பவர் யார்?

குருராயன் என்பதில்

குவ்வென்பது இருள்,

ரு வ்வென்பது அருள்,

ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் என்பது பொருளாம்.

இதனால் கு வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள்செய்து நின்று அதீதப் படுத்துகின்றோன் ராயன் ஆவன்.

திருவடி என்றால் என்ன?

அருளின்றி அமையாத வள்ளற் றன்மைக்கு அவ்வருளே முதற்காரணமா மாகலின், ஆனந்த வடிவராகிய பிள்ளையார் அவ்வானந்தப் பேற்றை அளிக்கும் வள்ளற் றன்மைக்கு முதற் காரணமாகிய திருவருட்சத்தியே திருவடி என்று குறித்தற்குக் காரணத்தைக் காரியமாக ஈண்டு உபசரித்த தெனினும் அமையுமென்க.


திருவடிகலின் சிறப்பு யாது?

திருவடிகள் தம்மை வழிபடுவோர்க்கு இரங்கி இன்பமீதற் பொருட்டு எழுந்தருளும் பிள்ளையாரது படர்ச்சி நிகழ்ச்சிக் கருவியாய் நின்று அவரை அவ்வழிபடுவோர்பால் வருவித்தலானும்,
ஞானதீக்கை பண்ணுங்கால் அவர் சென்னியிற் சூட்டப்பட்டு ஐக்கியம் வருவித்தலானும், நித்தியானந்தப் பேறுவாய்க்கு மாகலின் இங்ஙனமென்க.

அல்லதூஉம்,

வாட்டமில் அருளும்,

கோட்டமில் குணனும்,

அசையா நிலையும்,

நசையா மனனும்,

வெகுளாப் பண்பும்,

விடாப் பேரன்பும்

செவ்வியின்மரீஇ எவ்வௌர் எவ்வகை வேட்டனர் அவ்வகை விருப்பொடு குறிப்பின் வரையாதீதல் வள்ளற்றன்மை என்பவாகலின்,

இவ்வள்ளற் றன்மையைத் தம்பால் அடைந்தோரிடை அடைவித்தருளும் கருணைபற்றி அங்ஙனங் கூறியதெனினும் அமையும் என்க

உள்ளம் என்றால் என்ன?

உள்ளம் என்பது வாதனையால் உள்ளெழும் போதத்திற்கு ஆகுபெயராயது.


உள்ளத்து அழிவு என்பது போத அழிவா? மன அழிவா?

உள்ளத்தழிவில் என்பதற்கு மனத்தின் அசைவற்ற இடத்தெனப் பொருள் கூறுவாரும் உளராலோ எனின், மனத்தின் அசைவு போதவசைவறில் தானேயறும் ஆகலினும் அஃதறாதவிடத்து இஃதெவ்வாற்றானும் அறாதாகலினும் அது பொருந்தாதென்க. இதனை ஆசிரியர் கூறிய "பற்றாத போதும் பதறும்"11 என்னும் திருவெண்பாவாற் காண்க என்க.

உள்ளத்து அழிவில் என்ன ஏற்படும்?

உள்ளத் தழிவி லடுப்பது ஆனந்தம்.

அன்பர் என்பர்கள் யாவர்?

அன்பர் என்பது பொருள் புகழாதியைக் குறித்துப் பயில்வோரை நீக்கிச் சிவானந்தம் எந்நாள் அடைதும் என்று இடைவிடாது அதனையே விரும்பிப் பயில்வோரைக் குறித்ததென்று உணர்க.

யார் அன்பராக தகுதி உள்ளவர்கள்?

எலாம் என்பது சரிதாதி கன்ம மார்க்கங்களைக் கூறும் பிற நூல்களெல்லாம் பருவம் நோக்காது சாதி சமயாசார விகற்பங்களை நோக்கிச் சிலரை நீக்கியும் சிலரை நிறுவியும் அதிகரித்தல் போலாது அச்சாதிசமயாதிகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரேனும் பருவத்தராயின் இந்நூற்கு உரியராவர் என்பது குறித்தது என்று உணர்க.

ஒழிவிலொடுக்க நூலின் பதினைந்து சீர்த் தன்மை யாது?

இந்நூல்

ஆசாரியத் தன்மை,

சீடத்தன்மை,

பதித்தன்மை,

பசுத்தன்மை,

பாசத் தன்மை,

உபதேசத் தன்மை,

பக்குவத்தன்மை,

யோகநிவர்த்தி,

கிரியை நிவர்த்தி,

சரியை நிவர்த்தி,

விரத்தி விளக்கம்,

துறவுத் தன்மை,

அருளவத்தைத் தன்மை,

வாதனை மாண்டார் தன்மை,

நிலை இயல்பு

என்னும் இப் பதினைந்தையும் சீர் பெறக் கொண்ட தெனக் குறித்தது என்க.

(மேற்கண்ட சீர்த்தன்மை திருஅருட்பாவிற்க்கு பொருந்தி வருவதை அன்பர்கள் கவனிக்க)


ஒழிவிலொடுக்கம் அறிவிக்கும் எழுவகை நிலை யாது?

இந்நூல்

ஆன்மதரிசனம்,

அருட்டரிசனம்,

பரைதரிசனம்,

பரையோகம்,

பரையோக நீக்கம்,

போத ஒழிவு,

இன்பப் பேறு

என்னும் எழுவகை நிலையும் அறிவிப்ப தெனக் குறித்தது என்க.

(மேற்கண்ட எழுவகை நிலையையும் அதற்கும் மேலாய நிலைகளையும் திருஅருட்பா அறிவிப்பதை அன்பர்கள் கவனிக்க)

ஒழிவிலொடுக்கம் கூறும் நான்கு பதம் யாவை?

இந்நூல் கூறும் ஒப்பற்ற ஞானமும் சுத்தச்சரியை, சுத்தக் கிரியை, சுத்தயோகம், சுத்த ஞானம் என நான்கு பாதத்தோடு நடப்பதெனக் குறித்தது என்க.

இந்நூல் உரைபாடத்திற் சிலசில இடங்களிலுள்ள

மறைசொற் பொருட்குத் தெளிசொற் பொருள்

(வள்ளல் பெருமான் அளிய விளக்கம்)

1. பவுரிக்கூத்து - வலமிடமாகச் சூழ்ந்தாடுங் கூத்து.
குறுமன்னியர் - சிலரால் அறிந்து மதிக்கப்படும் பிரபுத்துவ முடையோர்.
மகாமன்னியன் - பலராலும் அறிந்து மதிக்கப்படும் பிரபுத்துவமுடையோன்.
பிரளயாகலர் - மும்மலங்களுள் ஒருமல நீத்தோர், அவர் பிரமன் முதலானோர்.

2. ஞாதுரு - காண்பான், ஞானம்-காட்சி, ஞேயம்-காணப்பட்டது.

3. சூக்குமை வாக்கு - வார்த்தை தோன்றற்கு முதற்காரணமாய் உந்தியிலே நாதவடிவாய் நிற்கும் ஒரு சத்தி.
பகடிக் கூத்து - உள்ளது போன்று இல்லாததைக் காட்டும் வெளிவேடம் அல்லது அகசியக் கூத்து

4. பரஞானம் - அனுபவஞானம், அபரஞானம்-வாசகஞானம்.

5. அரிப்பாளன் - குப்பை முதலிய இடங்களில் பொன் முதலிய அரித்தெடுக்கின்றோன்.
கொழுந்தாடை - கரும்பின் நுனித்தழை

10. சாயாபுருடன் - தன் நிழலைப் பார்த்துப் பின் ஆகாயத்தை உற்று நோக்குகின்றார்க்கு அவ்வாகாயத்தின்கண்
புருட வடிவம் போல் தோன்றும் அந்நிழற் காட்சி.

12. பைமறித்தல் - உள்ளிருந்த சரக்கு வெளிப்படப் பைவாய் தொட்டு உட்புறம் மேற்பட்டும் வெளிப்புறம் உட்பட்டும் மடங்க மடக்கல்.

16. கிண்கிணிவாய் செய்தலர்தல் - வட்ட வடிவாக முகங் கொண்டு மலர்தல்.

21. பஃறுளை - பலதுளை.

42. பற்ற - பார்க்கிலும்.

43. அருகித் தோற்றல் - சுருங்கித் தோற்றல்.

52. பிரேரகம் - காரியப்படுத்தல்.

54. பிரதிபலித்தல் - எதிர்பிம்பம்.

56. சகச மலம் - அனாதியாகிய மலம்.

65. கடா - வினா.

66. விட்டிசையா திசைத்தல் - நடுவே நில்லாமல் ஒலித்தல்.

67. நக்கினம் - நிருவாணம்.

80. தேறிட்ட நீர் - தேற்றாங்கொட்டையால் தெளிவிக்கப்பட்ட நீர்.

99. கவுசனை - யாதாயினும் ஓர் பொருளை உள்வைத்து மறைய மேல்மூடிக்கட்டும் மேற்கட்டு.

105. சுழல் விறிசு - கொள்ளி வட்டம்போல் சுற்றுவதாய ஒருவகை மருத்துவாணம். இத்தேயத்து இக்காலத்தில்
சுழல்புறிசு என்று வழங்குகின்றது.

109. அநன்னியம் - அன்னிய மல்லாமை.

113. நெற்பொலி - தூற்றாநெல்.

114. தும்பு செறித்து - தும்பு அவிழ்த்து

121. அனுபவிக்கச் சிதைக்கும் - அனுபவிக்க வறிகின்ற போதும்.

150. அவித்தியாகதம் - அஞ்ஞானமயம்.

153. முடி களச முத்தி: முடி - சிரசு, களசம் - நீக்கம், முத்தி-வீடு.

154. வாசி யென்ற வார்த்தை - இது செய்க விடுகவென்று நியாயமாகக் கூறும் வார்த்தை.

159. வியாபகம் - கலப்பு, வியாத்தி - கலக்கப்படுவது.

160. விசர்க்கரித்தல் - விடுத்தல்.

167. வெறுவீடர் - அனுபவிப்பதற் கில்லாமையால் விட்டோர் போன்றிருப்போர்.
கறண்டல் - பற்களால் நெருக்கிப் புறண்டுதல்.

177. சேட்டித்தல் - தொழிற்படுத்தல் அல்லது குணக்கேடான தொழில் விளைத்தல்.

183. சிங்கி - விலங்கு.

194. நாங்கூழ் - நாகப்பூச்சி யென்னும் ஓர் கிருமி.
விகளம் - மௌனம்.

198. மடலெடுப்பு - பனைமடலால் குதிரைசெய்து ஏறுதல்.

207. ஐவரரசர் - பாண்டு மக்களாகிய தருமன் முதலிய ஐவர்.

227. மந்தகாசப் பிரகாசம் - புன்னகைப் பிரகாசம்.

அடிக்குறிப்புகள்

காப்பு 3:- "உள்ளவுரை நாயேற் குறச் செய்யும்" என்று பாடமோதலுமுண்டு.

காப்பு :- ஈண்டு - இத்தோத்திரச் செய்யுட்கள் உரையாசிரியரால் இந்நூற்கு உரை இனிது முடிதற் பொருட்டு இயற்றப்பட்டன.

41. பரிபூரணமே பரையாய் என்பதைப் பரிபூரணப் பரையேயாய் என்று கூட்டுக.

42. இங்ஙனம் செய்யுட்கட் டானா யென்னு மொருமையை யுரைக்கட் டாமாகி யெனப் பன்மையாகக் கூறியது என்னை எனின், பிள்ளையார் என்னும் திருவருட்பெயரின் பெருமை நோக்கி என்க. இவ்வாறு கூறியவற்றிற் கெல்லாம் விதி யிங்ஙனமென்றுணர்க.

51. கதறல் கதற்றல் என விகாரமாயிற்று.

53. அகந்தை யென்பது அந்தையென் றிடைக்குறையாயிற்று.

76. செட்டையாற் பரிசித்தல் முதலியன அவ்வம் முட்டைகள் தத்தம் பருவமடைதற் கென்றறிக.
அமைத்துக்கொளல் காப்பின்கண் "ஈண்டு - இத்தோத்திரச் செய்யுட்கள்" என்றவையுள் ஆனைமுக னாறுமுக னென்னுஞ் செய்யுளை யொழித்து வேறு கொள்க.

4. "இக்கதையை இப்பொருளுக்கு" என்றதை அக்கதை இப்பொருளுக் கெனக் கொள்க. இங்ஙன மின்னும் சில விடங்களிலுள: அவற்றையு மங்ஙனங் கொள்க.

"மாறுபாடாய்க் கருதி" என்பதில் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சமாய ஆய் என்பதை செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சமாய ஆகவெனக் கொள்க. இங்ஙனம் இன்னும் சில இடங்களிலுள: அவற்றையு மங்ஙனங் கொள்க.

5. 10 முதலியன வடசொற்களுள் ஞாநம் - ஞானம், ஆநந்தம் - ஆனந்தம் எனத் தமிழிற்குப் பொதுவுஞ் சிறப்புமாய நகர னகரங்கள் சிற்சில விடங்களில் விரவி நின்றன. அவற்றைத் தமிழ்ச்சிறப்பு வழக்கு நோக்கி யமைத்துக் கொள்க.

8. "இருப்பது மன்றி அங்ஙன நின்று கேட்குமொழி பிரமோபதேச மொழியாகலின்" என்பதும் சிலவுரை பாடங்களி னுண்டு.

69. "ஞானத்தி லின்பை நசிப்பித்து நானதுவா மூனத்தை யாரொழிவிப்போர்" என்பதற்கு, "சுவாநுபவத்தான் ஞானா நந்தத்தைப் பெறாது அதனை விடயச் சேற்றாற் கெடுப்பித்து விடயச் சேற்றி லழுந்தி நின்று அவ்வாநந்தத்தை யடைதற் கேதுவாய்க் கூறும் ஞான சாத்திரங்களைக் கேட்டறிந்த மாத்திரத்தினால் அவ்வாநந்தமயனா னென்று கூறும்" என்பது சிலவுரை பாடங்களிலுண்டு: இது உரை வேறுபாடு.

* * *
Ozivilodukkam Book.png

Ozivilodukkam Book.png

7 Comments
ram govi
Great Job Anand, I was expecting a note on OlzivilOddukam for a long time, finally you have made it with your Tamil Scholarly knowledge. God will bless you abundantly.

APJ Aril, we have to contribute to SSSS like what Anand had done.
Monday, May 2, 2016 at 20:14 pm by ram govi
Anandha Barathi
Thanks for your appriciation Govi Ram ayya.
Tuesday, May 3, 2016 at 04:25 am by Anandha Barathi
Balachandar Krishnan
அறிய படைப்பு. வாழ்த்த வார்த்தைகள் இல்லை
Tuesday, June 28, 2016 at 02:29 am by Balachandar Krishnan
lalitha ks
Great work! Thank you
Tuesday, June 28, 2016 at 04:23 am by lalitha ks
TMR RAMALINGAM
வள்ளற்பெருமான் செய்த விருத்தி உரையினை வினா-விடை வடிவில் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தருவித்தமைக்கு நன்றி ஐயா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Wednesday, June 29, 2016 at 15:05 pm by TMR RAMALINGAM
Anandha Barathi
Thanks for your valuable appreciations all, sure will try to deliver this type of articles in future with Vallal perumans grace. Thanks.
Thursday, June 30, 2016 at 05:49 am by Anandha Barathi
Dr.Sabapathy Sivayoham
Great useful work Ananda Barathi I am sure VallalPeruman is motivating you from within. Thanks.
Friday, July 1, 2016 at 09:36 am by Dr.Sabapathy Sivayoham