Anandha Barathi
கல்பட்டு ஐயா இராமலிங்கம் - திரு வரலாறு- (இரண்டாம் பாகம்) - திரு .சீனி சட்டையப்பர் அய்யா
திரு .சீனி சட்டையப்பர் அய்யா அவர்களின் வள்ளலார் இளைஞர் மன்றத்தின் சார்பில் வெளிவந்த கல்பட்டு அய்யா அவர்களின் திரு வரலாறு (நன்றி - கடலூர் ராமலிங்கம்)

ஆன்மநேயமுள்ள ஆன்மாக்களே... வணக்கம்...

நாம் இப்போது நமது அருள்குருவான வள்ளலாரின் சீடர் 'கல்பட்டு ஐயா' வைப்பற்றி முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தைக் தற்போது காண்போம்...

நம்பெருமான் திருவடிகளைப் போற்றி நின்றவர்கள் பலர், ஆட்பட்ட அடியவர்கள் பலர், மாணவர்கள் பலர்.

அவர்களுள் கல்பட்டு ஐயா, தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின சபாபதிப் பிள்ளை, காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை, கருங்குழி புருடோத்தமன் ரெட்டியார் போன்றவர்கள் முதன்மையானவர்கள் எனலாம்.

எப்படி 'அருட்பெருஞ்ஜோதி' இறைவன், நமது அருள்குருவான வள்ளலார் இருக்கும் குடிசைக்கே வந்து அவரை அடிமைக்கொண்டாரோ அதுபோல வள்ளலார், 'கல்பட்டு ஐயா' இருக்கும் இடத்திற்கே சென்று அவரை அடிமைக்கொண்டார் என்பதுதான் வேறுயெந்த சீடர்களுக்கும் கிடைக்காத சிறப்பை அவர் பெற காரணமாக உள்ளது. மேலும் வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலார் திருவரையினுள் சென்றவுடன் அந்த அறை திருக்கதவுகளை வெளியிலிருந்து தாளிட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. எனவே இவரை வள்ளலாரின் 'முதன்மை சீடர்' என்பர்.

அடிமைச் சாசனம்

நமது பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திய விண்ணப்பத்தில் தெரிவித்தருள்கின்ற செய்திகள் இவை...

"அவத்தைகள் அனைத்தும் நீங்கிட நித்திய தேகம் பெறவேண்டும். அதுபெறத் திருவருட் சுதந்திரம் வேண்டும்.

பின்னர், திருவருள் சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேக சுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ சுதந்தரம் என்னும் மூவகை சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்".

இவ்வாறு இறைவர் முன்னிலையில் விண்ணப்பித்துப் பெருவாழ்வை உறுதிப் படுத்திக் கொண்டவர்கள் வள்ளல் அவர்களின் வழிவழி வந்த தொண்டர்கள் பலரும் அடிமைப்பத்திரம் எழுதி உடல் பொருள் ஆவியை நம்பெருமானுக்குப் படையல் செய்துள்ளனர். அதனையும் வள்ளல் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அங்ஙனம் விரும்புகின்றவருடைய தற்சுதந்திரத்தை நீக்கித் திருவருள் சுதந்தரத்தை தந்திடும் உரிமையும் உயர்வும் வள்ளற்பெருமானுக்கு இருந்ததனால் அவ்வாறு அடிமைப் பத்திரம் எழுதிப் பெற்றுள்ளார்கள்.

ஒரு சான்று:-

திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர்) வாழ்ந்த 'இரத்தினம்' என்பவர் அடிமைப் பத்திரம்வழியே, உடல் பொருள் ஆவியைப் பெருமானுக்கு ஒப்படைதார். அவர்தம் விண்ணப்பத்தைப் பற்றி அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"நான் பிறந்த காலத்தில் என் தாய் தந்தையர்களால் அண்ணாமலை என்று நாமகரணம் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு ஸ்ரீஇராமலிங்க சுவாமிகளால் இரத்தினம் என்ற பெயர் எனது 8 வது வயதில் இடப்பட்டது. எங்கள் குடும்பம், என் தகப்பனார் காலம் முதல் சுவாமிக்கு அடிமைப்பட்டு பத்திரம் மூலமாய் உடல் பொருள் ஆவி மூன்றும் தத்தம் செய்து அடிமைப்பத்திரம் என் தகப்பனார் எழுதிக் கொடுத்திருந்தார். நான் சுவாமியோடு கூடவே இருந்து அவருக்கு அடிமை செய்து வந்தேன்."

இவ்வாறு அன்பர்கள் பலர் ஆர்வத்தோடு வள்ளல் பெருமானிடம் அடிமைச் சாசனம் சமர்பித்துள்ளார்கள். வழிவழித் தொண்டர்தம் பெருமை எதனாலும் அளக்கும் தகுதி உடையதன்று. அன்பர்கள் கொள்ளும் ஆர்வத்தினைப் போல் கல்பட்டு அடிகளும் நம்பெருமானின் திருச்சமூகத்திற்கு அடிமைப் பத்திரம் செய்து தர முன்வந்தனர். ஆனால் ஒரு பெரிய வியப்பு! கல்பட்டு அடியவருக்கு நமது பெருமானே திருக்கைச் சார்த்தி அடிமைச்சாசனம் வரைந்தருளினார்கள். இந்நிகழ்ச்சி வள்ளல் மேட்டுக்குப்பத்தில் விளங்கிய போது 12-05-1872 ல் நடந்தது. அவ்விண்ணப்பம் பின்வருமாறு அமைந்துள்ளது.

போதநாச வந்தனம் செய்த விண்ணப்பம்

ஸ்ரீபார்வதிபுரம் என்னும் உத்தர ஞான சித்திபுரத் திருப்பதிக் கண்ணே அகிலாதாரமாய் விளங்கும் ஸ்ரீசமரச வேத சன்மார்க்க சங்கத்துப் பெருந்தலைப் பதியாக விற்றிருந்தருளும் அருட்பெருங்ஜோதியராகிய எமது ஆண்டவனார் திருச்சந்நிதிக்கு யான் எனும் போதநாச வந்தனஞ் செய்த விண்ணப்பம்:-

எம் இறைவரே!

இதுபரியந்தம் யானாகத் தேடியதோர் பொருளென்பது இல்லையாகவே;

தேவரீர், பெருங்கருணையால் என்னை உய்யக் கொள்ள உபகரித்தருளிய உடல் பொருள் ஆவி என்னும் மூன்றையும் அறியாமையால் யான் எனது என்று கொண்டதோர் சுதந்தரமானது துன்ப இன்ப விளைவுகளுக்கு ஆதாரமாய் இன்றைய வரையில் என்னைப் பற்றி இருந்தது ஒன்றை யான் பெரும்பொருளாக எண்ணி நின்றனன்.

ஆதலால் அச்சமரச சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் சமூகத்து நிற்கப் பெற்ற விசேடத்தால் அத்தற்சுதந்தரப் பொருளைத் தேவரீர் பெருங்கருணைச் சந்நிதி முன்னே அர்பித்தனன்.

இனி; தேவரீர் அதனை அருள்வசமாக்கி ஏழையாகிய என்னையும், என்னையடுத்த சுற்றம், என்னோடு பழகிய நட்பினர் ஆதியரையும் உய்யக்கொண்டருள்க.

இங்ஙனம்
அடிமை,
க. இராமலிங்கம்

"இந்த விண்ணப்பம் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளுக்காக சந்நிதானமே எழுதி வைத்தது" என்று ஓர் பிரதியில் இத்திருமுக வரலாறு காணப்படுகிறது என்று எழுதியுள்ளார் திருவருட்பா பதிப்பித்த பாலகிருட்டினர்.

சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் வள்ளற் பெருமான் விண்ணப்பித்து அருளியது போலவே இவ்விண்ணப்பமும் அமைந்துள்ளது. சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தோடு இந்த அடிமைப் பத்திரம் மிகவும் தொடர்பு உடையது. ஒவ்வொருவரும் உணர்ந்து உய்வதற்கான பல செய்திகளை முறையே கொண்டது. அதனை ஊன்றி நோக்கின் எத்தனையோ பேருண்மைகள் அதில் வெளிப்படுகின்றன.

1. உலகங்கட்குப் பற்றுக் கோடாய் விளங்குவது "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" ஆகும்.
2. அதன் ஒப்பற்ற தலைவராக வீற்றிருப்பவர் "அருட்பெருஞ்ஜோதி" ஆண்டவரே.
3. ஆண்டவர் திருச்சந்நிதிக்குத் தற்போதம் நாசமடைய விண்ணப்பிக்க வேண்டும்.
4. நாமாகத் தேடியது உடலும் அன்று, உயிரும் அன்று, உடைமையும் அன்று.
5. இறைவர் பெருங்கருணையினாலே அம்மூன்றும் நமக்கு அருளப்பட்டன.
6. அவற்றில் நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆண்டவர்க்கே அம்மூன்றும் உரிமையுடையன.
7. அறியாமையால் அவற்றை நம்முடையவை என்று நம்புகிறோம்.
8. வள்ளற்பெருமானை ஒத்த சன்மார்க்க சங்கத்து சாதுக்கள் திருமுன்பு பழக நேரின் அல்லது ஞானசபை இறைவனிடம் நாமும் உரிமையில்லாத அப்பொருளை ஒப்படைக்க முன்வருவோம்.
9. தற்சுதந்தரம் நீங்கிய இடத்து தான் திருவருள் சுதந்தரம் கைகூடும்.
10. தன்னை ஏற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது தன்னைச் சார்ந்தவர்களையும் ஆட்படுத்தி உய்விக்க வேண்டுதல் வேண்டும்.

மேற்கண்ட ஒப்பற்ற உயரிய செய்திகள் அவ்விண்ணப்பத்தில் காணப்படுகின்றதை திரும்ப ஒருமுறை படித்தேனும் உணர்க... நினைத்தற்கரிய கருத்துகள் அவை, கேட்டற்கரிய உயிர் உணர்வுகள் அவை, அவற்றை நெஞ்சகத்து வைத்துப் போற்றிப் பின்பற்றல் இவ்வுலக மக்களின்கடன்.

இவ்வளவு அருமை வாய்ந்த விண்ணப்பம் யாருக்காக வரையப்பட்டிருக்கிறது? யார் வரைந்தருளினார்கள்? பெரும்பொறுப்பும் பெரும்பேறும் பெற்று நின்ற தகுதி வாய்ந்த பக்குவர் கல்பட்டு ஐயா என்பதனால்தான் நமது பெருமானே அவ்விண்ணப்பத்தினை வரைந்தருளினார்கள், அவரிடம் கையொப்பமும் பெற்று வைத்துக்கொண்டார்கள்.

அவ்வாறு கல்பட்டு ஐயா உடல் பொருள் ஆவி மூன்றையும் தம் சற்குருநாதருக்கு ஒப்படைத்தார். அவர்கள் கட்டளை இட்ட வழியில் நின்று வாழ்ந்திட உறுதியோடு முற்பட்டார்.

அருள் நடம்

எவ்வுலகம் தன் அருள் ஆணையின்கீழ் விளங்கி உய்ய ஞான சிங்காதன பீடத்து அமர்ந்து, அருட்பெரும் தலத்து மேல்நிலையில் செங்கோல் செலுத்தி, அருள் ஆட்சி புரிந்து அருட்பெரும் போகம் சர்வ சுதந்தரத்துடன் துய்த்திருத்தல் பொருட்டாக எவ்வுலகும் அறிய அருள் சக்தியைத் திருமணம் புரிந்தருளி, எங்கும் எவ்விடத்தும் எவ்வுயிரின்பாலும் நம்பெருமான் அருள்நடம் செய்தருளும் காலம் வந்துற்றது.

சித்திவளாகத்தில் கல்பட்டு ஐயா

1874 ஆம் ஆண்டு ஸ்ரீமுக தைத்திங்களில் பூச நல்நாளில் நம்பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில் திருவறை புகுந்தார்கள்.

அவ்வமயம் உண்மை அன்பர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். அடிமைபூண்ட நேயர்கள் பலர் சூழ்ந்திருந்தனர். பெருமானின் கட்டளையின் வண்ணம் திருவறை திருக்காப்பிடப்பட்டது. அவ்வாறு திருக்காப்பிட்டவர்களுள் முதன்மையானவர் கல்பட்டு ஐயா. வள்ளலின் நிறைவின் போது, அவர்களின் கட்டளையை நிறைவேற்றும் பெரும்பேறு கல்பட்டு ஐயாவிற்குக் கிடைத்தது. திருவருள் ஆணையை நிறைவேற்றும் முதண்மையாளராகக் கல்பட்டு ஐயா விளங்கினார்.

சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்டதும் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் தொழுதூர் வேலாயுத முதலியார் அவர்களும் வெளியில் பூட்டிட்டு சீல் வைத்தார்கள்.

என்று இதுபற்றிச் சத்திய ஞானசபை வழிபாட்டு விதிகளைக் குறித்து 23-02-1928 ல் வாக்குமூல அறிவிப்பு கொடுத்திட்ட திருப்பாதிரிப்புலியூர் இரத்தினம் என்பவர் குறிப்பிடுகின்றார்.

(மூன்று நாள் கழித்து அன்று இருந்த ஆங்கில அரசால் இந்த சீலை உடைத்து திருக்கதவை திறந்துபார்த்த போது அங்கு நம்பெருமான்.........நமது ஊணகண்களுக்கு காட்சியாகமலிருந்தார்........என்றும் எங்கும் இருக்கின்றார்........நமது ஊணக்கண்களுக்கு பழையபடி காட்சி கொடுக்கும் காலமும் மிக அருகில் கனிந்து வருகிறது.....)

இவ்வாறு நம்பெருமான் ஆணையிடும் இன்றியமையாக் கடமைகளைக் கல்பட்டு ஐயா நிறைவேற்றும் பொறுப்பினைப் பெற்று விளங்கினார்.

சாலைப்பணி

வள்ளல் அனைத்துயிரினும் நிறைந்து விளங்கும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுத் திருக்காப்பிட்டுக் கொண்டபின் சத்திய தருமச்சாலையை நடத்துவிக்கும் பொறுப்பினை கல்பட்டு ஐயா ஏற்றுக்கொண்டார். அவ்வாறு மேற்கொண்டு நடத்துவிக்கும் பொறுப்பினை நமது பெருமான் கல்பட்டாருக்கே வழங்கியருளினார்கள்.

ஈரமும் அன்பும் கொண்டு இன்னுயிர்களை ஓம்பும் வேள்வியை அருமைக் கல்பட்டார் செய்துவந்தார். பெருமானின் கருத்துபடி பசிப்பிணி மருத்துவத்தை அல்லும் பகலும் ஓயாமல் தொடர்ந்து செய்தார். ஓரிரண்டு ஆண்டுகள் அல்ல, 25 ஆண்டுகளாக சாலைப் பணியை நயந்து நடத்தினார். அதனால் இம்மை மறுமை பேரின்பத்தால் நிறைகின்ற பெரும்பயனாம் விளைவையெல்லாம் தருமச்சாலையிலே பெற்றுக்கொண்டார். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளல்ல. அதற்கான விளக்கங்களை வடலூர் தெய்வ நிலையங்களின் அலுவலகப் பதிவேடுகள் காட்டுகின்றன!

வழிவழித் தொண்டர்கள்

சாலைப்பொறுப்பு 1901 வரையில் கல்பட்டு அடிகள் கண்காணிப்பில் இருந்து வந்தது. 06-02-1902ல் அப்பொறுப்பினைத் தமது மாணவராகிய "சுப்புராய பரதேசி" என்பவரிடம் ஒப்புவித்தார். சுப்புராயர் தெலுங்கு நாட்டுக்காரர். அவர் தொண்டு புரியவே விரும்பி வந்தவர், கல்பட்டு ஐயா வழி, வள்ளல்பெருமானை நன்கறிந்து எதிரற்ற அன்புகொண்டவர். அவருக்கு உதவியாக சாலைப் பணிகளில் தோய்ந்தவர் "கட்டமுத்துப்பாளையம் நாராயணர்" ஆவார். அவரே 1927ல் பிரபவ வைகாசி 11 ஆம் நாள் சாலைத்திருப்பணி முடித்தவர். இச்செய்தியினை பிறையாறு சிதம்பர சுவாமிகள் குறிக்கின்றார்.

"குறிப்பிட்ட நாராயணர் அவர்களே சாலையை நீண்டநாள் கல்பட்டு ஐயாவுக்குப் பின் அவர் மாணாக்கராயிருந்து அவர் ஆணைப்படி சத்திய தருமச்சாலையை நடத்தி வந்த தெலுங்கு தேசத்து சந்நியாசியாகிய சுப்புராய சுவாமிகளுக்கு உறுதுணையாக இருந்து சென்ற பிரபவ வருஷம் வைகாசி 11ம் தேதி சுமார் 37 (2013ல்-86) ஆண்டுகளுக்கு முன்பு சாலை கட்டிடத் திருப்பணி வேலையை முடித்துப் பிரவேச விழா நடத்தி நம்பெருமான் அருளை பெற்றார்கள். (இராமலிங்க சுவாமிகளின் திவ்ய சரித்திரம் பக்கம் - 99)

இதிலிருந்து தொண்டுள்ளம் கொண்டு நெறிநின்ற தொண்டர்களை கல்பட்டு ஐயா உருவாக்கினார். அவர்கள் தொடர்ந்து சாலையை நடத்திவந்ததை 1896 ஜனவரியில் வெளிவந்த டிரஸ்டு மறுப்புப் பத்திரிகை கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது...

"வள்ளலார் திருக்காப்பிட்டுக்கொண்ட காலமுதல் வள்ளலார் குறிப்பின்படித் தருமச்சாலையின் தரும பரிபாலனம் சிலகாலம் சில சன்னியாசிகள் கூடிநடத்திக் கொண்டு வந்தார்கள்".இதனால் கல்பட்டு அடியவரும் வழிவழித் தொண்டர்களும் சாலையை நடத்தியது புலனாகிறது.

சமாதி அடைதல்

வள்ளல் வழியில் மாறாத அன்புகொண்டு பணிசெய்தும், பரஞ்சுடர் கண்டுநிற்கும் யோகம் செய்தும் ஏறக்குறைய 35 ஆண்டுகள் வடல்வெளியில் வாழ்ந்த கல்பட்டு ஐயா, சுபகிருதுஸ்ரீ, சித்திரைமீ, 14ஆம் நாள் (26-04-1902) சனிக்கிழமை, கேட்டை விண்மீன் சதுர்த்தசி கூடிய நாளில் சமாதி கொண்டிட்டார். அன்பர்கள் அவரைச் சாலையின் கீழ்புறத்தில் அடக்கம் செய்தனர். அங்கே கோவிலும் எடுத்துள்ளனர். நினைவு ஆலயமாக இன்று அனைவர்க்கும் அது வழிகாட்டி நிற்கிறது. அதன் முன்பு மேலும் மூன்று சமாதிகள் உள்ளன. கிழக்கு புறத்தில் உள்ளது கட்டமுத்துப்பாளையம் நாராயணர் சமாதி, மேற்குப்புறத்தில் உள்ளது சுப்புராய பரதேசியார் சமாதி, நடுவில் உள்ளது பிற்காலத்துக் கொண்டார் சமாதி. தொண்டு செய்து தம் வாழ்வை நற்பயன் உடையதாக்கி, அங்கே சமாதி கொண்டுள்ள தொண்டர்கள் அனைவரும் நல் வழிகாட்டிகளாவர்.

கல்பட்டு சுவாமிகள்

கல்பட்டு ஐயாவை, 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்' என்று மிகவும் மதிக்கப்பட்டு அன்பர்கள் குறிப்பிட்டு வந்தனர். சான்றாகக் கடிதப்பகுதியில், 'போதநாச வந்தன' அடிக்குறிப்பில், 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகளுக்காக' என்ற செய்தியினை அன்பர் ஒருவர் வரைந்திருப்பதாகப் பதிப்பாசிரியர் பாலகிருட்டினர் குறிப்பிடுகின்றார்.

மேலும் தொழுவூரார் திருமகனார் திருநாகேசுவரர் மார்க்கண்டேய புராண தொழுவூர் வேலாயுதனார் வரலாற்றில், 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்' என்று வரைந்துள்ளார்.

சத்திய ஞானசபை பற்றிய வாக்குமூலக் குறிப்பில் திருப்பாதிரிப்புலியூர் இரத்தினம் என்பவர் 'கல்பட்டு இராமலிங்க சுவாமிகள்' என்றே குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சுவாமிகள் என்று பலர்க்கும் வழங்குவது போல் கல்பட்டு ஐயாவிற்கும் வழங்கப்பட்டதல்ல. எல்லாம் உடையவரே ஆட்கொண்டதால் அப்பெயர் நிலவி வருகிறது. இவ்வாறு அன்பர்களால் மிகவும் மரியாதையுடன் அழைக்கப் படுகின்ற உயர்நிலையினை உற்றுக் கல்பட்டு ஐயா விளங்கினார்.

கல்பட்டு மூர்த்திகள்

நமது பெருமான் திருநறுங்குன்றத்திற்கு 1866 ல் வரைந்த கடித்ததில் கல்பட்டு ஐயாவைச் 'சிவஞான விரும்பினராகிய இராமலிங்க மூர்த்திகள்' என்று குறித்தார்கள்.

அத்துடன் கல்பட்டு ஐயாவை இராமலிங்க மூர்த்திகள் என்று சிறப்புக்கொடுத்து குறிப்பிடுகின்றார்கள் வள்ளல். மூர்த்திகள் என்னும் சொல்வள அமைப்பினைக் காணுங்கால் கல்பட்டு ஐயா மூர்த்திகள் பதம் பெற்றவராக விளங்கினார் என்று தெரிகிறது. சுந்தரமூர்த்தி, திரிமூர்த்தி, பஞ்சமூர்த்தி, தட்சணாமூர்த்தி, புண்ணியமூர்த்தி முதலான தொடர்களை ஆழ்ந்து எண்ணிடல் வேண்டும். பெருமான்பால் சூழ நின்ற அன்பர்களுள் கல்பட்டு ஐயாவே மேற்குறிப்பிட்ட மூர்த்திகளுக்கான் பதத்தகுதியினைப் பெற்று விளங்கினவர் என்று தெரிகிறது.

கல்பட்டு ஐயா தோற்றம்

சிவந்த மேனி, எடுப்பான தோற்றம், வாட்டசாட்டமான் உருவம், நீண்டு மார்பில் அலைபாயும் தாடி, இடையில் ஒரு முண்டு, கையில் ஏற்றதொரு தண்டு, தோளில் மடித்துப் போட்டிருக்கும் துப்பட்டி, நடையில் மிடுக்கு இந்தக் காட்சிக்கு உரிய தவவடிவமே கல்பட்டு ஐயா!

இனி வடலூர் சென்றால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை மற்றும் கல்பட்டு ஐயாவின் சமாதியையும் வழிபட்டு வரவும்.

கல்பட்டு ஐயாவின் சமாதியை வணங்குவோம், அப்படியே வள்ளலின் நேரடி வழிகாட்டுதலில் இருந்து சுத்த சன்மார்க்கத்தை கற்ற அவருக்கே சமாதி நிலைதேனே கிட்டியது, அப்படியெனில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம், இன்னும் நாம் ஏறாநிலைமிசை ஏற நமக்கு என்னென்ன தடைகள் உள்ளன என்று நமக்குநாமே விசாரித்து அத்தடைகளையெல்லாம் துச்சமென விடுத்து அந்த மரணமிலா வாழ்க்கையில் - 'அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவருக்கு, இன்னும் பல வள்ளலார்கள் இருப்பதை நிரூபிப்போம்.

சபையெனது உளம்எனத் தான் அமர்ந்தெனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி

மருளெலாந் தவிர்த்து வரமெலாம் கொடுத்தே
அருளமும் அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழிஒன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி

என்னையும் பொருளென எண்ணிஎன் உளத்தே
அன்னையும் அப்பனுஆகி வீற்றிருந்து

உலகியல் சிறிதும் உளம்பிடியா வகை
அலகில் பேரருளால் அறிவது விளக்கி

சிறுநெறி செல்லாத் திறன்அளித்து அழியா
உறுநெறு உணர்ச்சி தந்தொளி உறப்புரிந்து

சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்து மேன்மேலும்

அன்பையும் விளைவித்து அருட் பேரொளியால்
இன்பையும் நிறைவித் என்னையும் நின்னையும்

ஓர்உரு ஆக்கியான் உன்னிய படியெலாம்
சீர்உறச் செய்து உயிர்த்திறம் பெறஅழியா

அருள்அமுதம் அளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருளறிவு அளித்தனை அருட்பெருஞ் ஜோதி

வெல்க நின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

உலகுயிர்த் திரளெலெல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

உலகினில் உயிர்களுக் உறும்இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

Kalpattu_Ayya_6.jpg

Kalpattu_Ayya_6.jpg

Kalpattu_Ayya_7.jpg

Kalpattu_Ayya_7.jpg

Kalpattu_Ayya_8.jpg

Kalpattu_Ayya_8.jpg

Kalpattu_Ayya_9.jpg

Kalpattu_Ayya_9.jpg

Kalpattu_Ayya_10.jpg

Kalpattu_Ayya_10.jpg

Kalpattu_Ayya_11.jpg

Kalpattu_Ayya_11.jpg

Kalpattu_Ayya_12.jpg

Kalpattu_Ayya_12.jpg

2 Comments
Anandha Barathi
அன்புள்ள செந்தில் அய்யா,

தங்களின் அன்பு வேண்டுகோளின் படி திரு.சீனி சட்டையப்பர் அய்யா அவர்களின் வள்ளலார் இளைஞர் மன்றத்தின் சார்பில் வெளிவந்த கல்பட்டு அய்யா அவர்களின் திரு வரலாறு நூலினை இங்கு வெளியிட்டுள்ளோம், இப்பணிக்கு உதவிய கடலூர் ராமலிங்கம் அய்யா அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

அன்பர்கள் படித்து பயன் பெறுவார்களாக!
Monday, July 29, 2013 at 06:20 am by Anandha Barathi
Sathyamangalam.  Ramanatham Sathyanarayanan  Sathyanarayanan.  S.R
Old timers mingle with seeders of vadalurar .sathyam saidai 9962578086
Saturday, January 5, 2019 at 02:14 am by Sathyamangalam. Ramanatham Sathyanarayanan Sathyanarayanan. S.R